வட மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகம், கேரளாவை சேர்ந்த 1,000 பேர் இன்று திருச்சி வருகை


வட மாநிலங்களில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகம், கேரளாவை சேர்ந்த 1,000 பேர் இன்று திருச்சி வருகை
x
தினத்தந்தி 10 May 2020 9:23 AM IST (Updated: 10 May 2020 9:23 AM IST)
t-max-icont-min-icon

வட மாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளாவை சேர்ந்த 1000 பேர், சிறப்பு ரெயில் மூலம் இன்று திருச்சி வருகிறார்கள்.

திருச்சி, 

வட மாநிலங்களில் இருந்து தமிழகம், கேரளாவை சேர்ந்த 1000 பேர், சிறப்பு ரெயில் மூலம் இன்று திருச்சி வருகிறார்கள். அவர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்ல 30 பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக பஸ், ரெயில், விமான சேவை அடியோடு ரத்து செய்யப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்கும் வகையில் சிறப்பு பார்சல் ரெயில்கள் மற்றும் சரக்கு ரெயில் சேவை மட்டும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் பொது போக்குவரத்து சேவை இல்லாத காரணத்தால் வடமாநிலங்களில் வசிக்கும் தமிழகத்தை சேர்ந்தவர்களும், தமிழகத்தில் வசிக்கும் வட மாநிலத்தவர்களும் சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் அவதி அடைந்தனர். பலர் நடை பயணமாகவே சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சுகளுடன் புறப்பட்டு வந்துள்ளனர். இன்னும் பலர் வந்து கொண்டிருக்கிறார்கள்.

சிறப்பு ரெயில்

இதனால் வெளிமாநில தொழிலாளர்களை சிறப்பு ரெயில்கள் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கையை மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 1,000 பேர் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் தவித்து வருகிறார்கள். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் முயற்சியை அம்மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.

அதன்படி, மராட்டிய மாநிலம் பந்தார்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரெயில் புறப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. அந்த ரெயிலில் குஜராத், மராட்டிய மாநிலங்களில் வசித்த தமிழகத்தை சேர்ந்த 962 பேரும், கேரளா மாநிலத்தை சேர்ந்த 38 பேரும் என மொத்தம் 1,000 பேர், ஒரு ரெயில் பெட்டிக்கு தலா 50 பேர் வீதம் 20 ரெயில் பெட்டிகளில் பயணித்தபடி வருகிறார்கள்.

இன்று திருச்சி வருகை

அந்த சிறப்பு ரெயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.40 மணிக்கு திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தை வந்தடைகிறது. ரெயிலில் இருந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவர்கள் இறங்கி செல்லும் வகையில் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகத்தால் ஆயத்தப்பணிகள் நேற்று செய்யப்பட்டன. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து 6 அடி இடைவெளிவிட்டு, சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கோடு போடப்பட்டது.

ரெயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளப்பகுதியில் தூய்மை பணியாளர்கள் பிளச்சிங் பவுடர் தூவினர். மேலும் ரெயில் நிலைய தளங்கள் அனைத்தும் சுத்தமாக தண்ணீரில் கிருமிநாசினி கலந்து கழுவி விடப்பட்டது. திருச்சி ரெயில்வே கோட்ட முதன்மை மேலாளர்கள் நரேன்(வணிகம்), பூபதிராஜன் (ஆபரேட்டிங்) ரெயில்வே பாதுகாப்பு படை ஆணையர் மொகைதீன், கோட்ட செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் நிலைய மேலாளர் விருத்தாச்சலம், ரெயில்வே சுகாதார மருத்துவ அதிகாரி கல்யாணசுந்தரம் ஆகியோர் மேற்பார்வையில் ஆயத்தப் பணிகள் நடந்தன.

30 பஸ்கள்

சிறப்பு ரெயில் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்ததும், 1,000 பேருக்கும் கொரோனா பாதிப்பை கண்டறியும் வகையில் ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் உடல் வெப்பநிலை அளவீடு செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் மாநில அரசு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு அவர்களை வரவேற்று அழைத்து செல்கிறார். பின்னர் அவர்களை ஓரிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று காலை உணவு வழங்கப்படுகிறது.

அதன் பின்னர், அரசு போக்குவரத்து கழகத்தின் 30 பஸ்கள் மூலம் ஒரு பஸ்சுக்கு தலா 35 பேர் வீதம் திருச்சியில் இருந்து மதுரை, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை என அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். இதுபோல கேரளாவை சேர்ந்த 38 பேரும் தனி பஸ்சில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

Next Story