மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் பள்ளி மைதானத்திற்கு மாற்றம்
மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் பள்ளி மைதானத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதாக மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறினார்.
மதுரை,
மதுரை மாநகரில் கொரோனா நோய் பரவுதலை தடுக்க மக்கள் கூடும் பகுதிகள், சந்தைகள் எல்லாம் மூடப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. மதுரை கரிமேடு மீன் மார்க்கெட், மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. மாட்டுத்தாவணியில் நடந்த சில்லறை காய்கறி வணிகமும் மாட்டுத்தாவணி பஸ் நிலையம் மற்றும் அம்மா திடல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு பகுதியிலும் செயல்பட்டு வந்த சந்தைகள் மூடப்பட்டு பள்ளி, கல்லூரி மைதானங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ஒரு பகுதியை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய கமிஷனர் முடிவு செய்தார். அதற்காக அவர் புதூர் ஐ.டி.ஐ. அருகில் உள்ள டிநோபில் மெட்ரிக் பள்ளி மற்றும் வண்டியூர் சுந்தரம் பூங்காவில் ஆய்வு செய்தார். இறுதியாக டிநோபில் பள்ளி தேர்வு செய்யப்பட்டது.
இது குறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறியதாவது:-
மாட்டுத்தாவணியில் செயல்பட்டு வரும் மொத்த காய்கறி மார்க்கெட் கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடுவதாலும், சமூக இடைவெளியினை முறையாக கடைபிடிக்காத காரணத்தினாலும் மொத்த காய்கறி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், கனரக வாகன நிறுத்துமிடம், அம்மா திடல் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பழ மார்க்கெட்டில் சில்லறை விற்பனை செய்யும் சில கடைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுகின்றனர். எனவே அங்குள்ள 245 கடைகளில் 45 கடைகள் சிட்கோ தொழிற்பேட்டை பின்புறம் உள்ள டி நோபில் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் அமைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story