தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தடை உத்தரவு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும்- மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தல்
ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தடை உத்தரவு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்தநிலையில் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ள போதிலும் தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு தாலுகா அலுவலகங்களிலும், பேரிடர் மேலாண்மை அலுவலர்களிடமும் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. வணிக நிறுவனங்களுக்கான அனுமதி வழங்குவதில் மாவட்ட நிர்வாகம் அறிவித்த விதிமுறைகளுக்கு முரணாக தாலுகா அலுவலகங்களில் அனுமதி வழங்கப்பட்டதால் பல்வேறு பகுதிகளில் தேவையற்ற குழப்பநிலை நிலவுகிறது.
தற்போது தமிழக அரசு நாளை காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை தனிக்கடைகள் செயல்படவும், காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை டீக்கடைகள் செயல்படவும் அனுமதி அளித்துள்ளது. டீக்கடைகளில் யாரும் அமர்ந்தோ, நின்று கொண்டோ டீ குடிக்க கூடாது என்றும், பார்சல்கள் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறும் டீக்கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே அறிவித்துள்ள தடை உத்தரவுகள், கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விதிமுறைகளை பின்பற்றுவது முறையாக கண்காணிக்கப்படவில்லை. பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிப்பது புறக்கணிக்கப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை தடை உத்தரவை மீறியதாக 6,617 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு குறிப்பிட்ட நடைமுறை தடை உத்தரவுக்கு முரணானது என்று வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும் தொடர்ந்து அந்த நடைமுறை நடந்து கொண்டு இருப்பதை போலீசார் அனுமதிக்கும் நிலை தொடர்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் வழக்கமான காலங்களில் விதிமுறைகளை கடைபிடிப்பதை கூட தற்போது கடைபிடிப்பது இல்லை. மொத்தத்தில் தளர்வுகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தடை உத்தரவு விதிமுறைகளை புறக்கணிப்பதும் அதிகரித்து வருகிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் கூடுதலாக அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் அரசு அறிவித்துள்ள தடை உத்தரவு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இல்லையேல் கொரோனா தொற்று சமூக பரவல் ஆவதை தடுக்க முடியாமல் போய்விடும்.
Related Tags :
Next Story