கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு மினி லாரியில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்


கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு மினி லாரியில் கடத்திய ரூ.6 லட்சம் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 10 May 2020 9:35 AM IST (Updated: 10 May 2020 9:35 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத்திற்கு காய்கறி ஏற்றி சென்ற மினிலாரியில் கடத்திய ரூ.6 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பையனப்பள்ளி ஜங்ஷன் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, அந்த வழியாக காய்கறி அவசரம் என்ற ஸ்டிக்கருடன் வந்து கொண்டிருந்த மினி லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்த போலீசார் அந்த லாரியில் சோதனை செய்தனர். இதில் 24 மூட்டைகளில் மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

மினி லாரியுடன் குட்கா பறிமுதல்

விசாரணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலத்திற்கு குட்காவை கடத்தி சென்றதும், ஊரடங்கு நேரத்தில் போலீசார் வாகனத்தை நிறுத்தாமல் இருப்பதற்காக காய்கறி அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டி குட்காவை கடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து மினி லாரியுடன், ரூ.6 லட்சம் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் சேலத்தை சேர்ந்த மினிலாரி உரிமையாளர் சுரேஷ் மற்றும் டிரைவர் சரவணன் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், காய்கறி வாகனம் என லாரியில் ஸ்டிக்கர் ஒட்டி, குட்கா பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story