ஐகோர்ட்டு உத்தரவையடுத்து கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு போலீசார் பாதுகாப்பு


ஐகோர்ட்டு உத்தரவையடுத்து கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைப்பு போலீசார் பாதுகாப்பு
x
தினத்தந்தி 10 May 2020 10:36 AM IST (Updated: 10 May 2020 10:36 AM IST)
t-max-icont-min-icon

ஐகோர்ட்டு உத்தரவையடுத்து கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கரூர், 

ஐகோர்ட்டு உத்தரவையடுத்து கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, டாஸ்மாக் மதுக்கடைகளும் மூடப்பட்டன. கரூர் மாவட்டத்தில் உள்ள 95 கடைகளும் மூடப்பட்டன. இந்தநிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

அதன்படி கடந்த 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. கரூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையை தவிர, மற்ற 94 கடைகளும் திறக்கப்பட்டன. 40 நாட்களுக்கும் மேல் மது கிடைக்காமல் தவித்து வந்த மதுப்பிரியர்கள் மதுக்கடைகள் முன்பு திரண்டனர். நேற்று முன்தினம் 2-வது நாளிலும் டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் களை கட்டியது. கரூர் மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.6 கோடிக்கு மேல் மது விற்பனை ஆனது.

ஏமாற்றம்

இந்த நிலையில் மதுக்கடை திறப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை மூட ஐகோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று கரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் கடைகளுக்கு முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டது தெரியாமல் மதுப்பிரியர்கள் சிலர் நேற்று காலையும் வந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story