இரு பிரிவினரிடையே மோதல்: வாலிபர் கைது- 14 பேர் மீது வழக்கு
இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கறம்பக்குடி,
இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் வாலிபர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மோதல்
கறம்பக்குடி அருகே உள்ள கறம்பவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் (வயது 23). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள கொம்புக்காரன் சுவாமி கோவில் திடலில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு தரப்பை சேர்ந்த பவுன்ராஜ் (20) என்பவரிடம் முன்விரோதம் காரணமாக மனோகரன் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே பவுன்ராஜ் தரப்பினரும் அங்கு வந்ததால், 2 தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மனோகரன் காயமடைந்து சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பவுன்ராஜை கைது செய்தனர். மேலும் அவரது தரப்பில் 6 பேர் மீதும், பாலமுருகன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மனோகரன் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க. பிரமுகரின் கார் கண்ணாடி உடைப்பு
*புதுக்கோட்டை சாந்தனாபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (41). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் வார்டு கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக கிருஷ்ணகுமாரின் கார் கண்ணாடியை அதே பகுதியை சேர்ந்த சூரியநாராயணன் (19), சந்தோஷ் (19), பரதா, சதீஷ் ஆகியோர் சேர்ந்து உடைத்தனர். இது தொடர்பாக டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூர்விகா வழக்குப்பதிவு செய்து சூரியநாராயணன், சந்தோஷ் ஆகிய 2 பேரை கைது செய்தார். மேலும் 2 பேரை தேடி வருகிறார்.
பரிசோதனைக்கு பிறகு அனுமதி
*கீரமங்கலம் அருகே உள்ள வேம்பங்குடி கிழக்கு கிராமத்திற்கு கரும்பு வெட்டும் பணிக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து 20 தொழிலாளர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தனர். அவர்களை கீரமங்கலம் போலீசார் மற்றும் மேற்பனைக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள் அவர்களின் முழுவிவரங்களையும் சேகரித்து, முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைகள் செய்த பிறகு கரும்பு வெட்ட அனுமதித்தனர்.
பள்ளியில் கணினிகள் திருட்டு
*அன்னவாசல் அருகே சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புற கதவை உடைத்து 2 கணினிகளை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து தலைமை ஆசிரியர் தமிழரசி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு திட்டத்தில் சேர்ப்பு
*அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்தை சேர்ந்த ஏழை குடும்பத்தை சேர்ந்த 15 பெண் குழந்தைகள் மத்திய அரசு திட்டமான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட பா.ஜ.க. மகளிரணி தலைவர் கவிதா ஸ்ரீகாந்த் ஏற்பாட்டில் சேர்க்கப்பட்டனர்.
குழிக்குள் இறந்து கிடந்த மீனவர்
*மணமேல்குடியை அடுத்த வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (45). மீனவரான இவர் கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் மணமேல்குடி வடக்கூர் பகுதியில் ஒரு குழியில் இறந்து கிடந்தார். மேலும் அங்கு மதுபாட்டில்கள் கிடந்தன. இது தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணன் மது குடித்து இறந்தாரா? அல்லது வேறு யாராவது அடித்து கொன்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 நாட்கள் தனிமை
*அரிமளம் ஒன்றிய பகுதிக்கு வெளியூர்களில் இருந்து பலர் வந்துள்ளனர். அவர்களை 11 நாட்கள் தனிமையில் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அவர்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐஸ் ஆலைகளுக்கு ‘சீல்’
*ஊரடங்கு உத்தரவை மீறி கந்தர்வகோட்டை செங்கிப்பட்டி ரோட்டில் செயல்பட்ட பேச்சிமுத்து என்பவருக்கு சொந்தமான ஐஸ் ஆலையையும், பெரிய கடை வீதியில் செயல்பட்ட வைத்திலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஐஸ் ஆலையையும் போலீசார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர். இது தொடர்பாக ஆலை உரிமையாளர்களை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
முந்திரி தொழிலாளர்கள் கவலை
*ஊரடங்கு காரணமாக ஆதனக்கோட்டை பகுதியில் முந்திரி தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் வீடுகளில் முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதைதொடர்ந்து மீண்டும் தொழிலை தொடங்கினர். ஆனால் முந்திரி விற்பனை சரியாக நடைபெறவில்லை. இதனால் போதிய வருமானம் கிடைக்காமல், அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கணேஷ்நகர் பகுதியில் 5 கடைகளுக்கு ‘சீல்’
*புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வில் அரசு அறிவித்த நடைமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு போலீசார், வருவாய்த்துறை மூலம் ‘சீல்’ வைத்தனர். இதேபோல கணேஷ்நகர் பகுதியில் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில் நடந்த சோதனையில் 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன.
Related Tags :
Next Story