கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் பாதுகாப்பு ஆடைகள் வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் வழக்கு


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் பாதுகாப்பு ஆடைகள் வழங்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
x
தினத்தந்தி 10 May 2020 11:44 AM IST (Updated: 10 May 2020 11:44 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அனைவருக்கும் பாதுகாப்பு ஆடைகள் வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த சத்யமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை, 

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழலில் டாக்டர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், அரசு மற்றும் அரசு சாராத தன்னார்வலர்கள் என பலர் களப்பணியாற்றி வருகின்றனர்.

களத்தில் நின்று பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பாதித்த பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அம்மா உணவகத்தில் பல்வேறு பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நெருக்கடி மிகுந்த இந்த காலத்தில் முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஆகவே டாக்டர்கள், காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள், வருவாய் அலுவலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உடலை முழுமையாக பாதுகாக்கும் வகையிலான பாதுகாப்பு ஆடைகள், முக கவசங்கள், கையுறைகள், ரப்பர் காலணிகள் உள்ளிட்டவற்றை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story