ராமேசுவரத்தில் இருந்து வடமாநிலங்களை சேர்ந்த 173 பேர் 6 பஸ்களில் அனுப்பி வைப்பு


ராமேசுவரத்தில் இருந்து வடமாநிலங்களை சேர்ந்த 173 பேர் 6 பஸ்களில் அனுப்பி வைப்பு
x
தினத்தந்தி 10 May 2020 12:30 PM IST (Updated: 10 May 2020 12:30 PM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரத்தில் இருந்து வடமாநிலங்களை சேர்ந்த 173 பேர் 6 பஸ்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ராமேசுவரம் வந்த சுற்றுலா பயணிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக ரெயில்கள், பஸ்கள் இயக்கப்படாததால் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 40 நாட்களுக்கு மேலாகி விட்டதால் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவ ராவ் இதுகுறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார்.

இதன்படி ராமேசுவரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 52 பேர், பீகாரை சேர்ந்த 83 பேர், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 33 பேர், சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 2 பேர், டெல்லியை சேர்ந்த 2 பேர், மராட்டியத்தை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 173 பேர் 6 தனியார் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தாசில்தார் அப்துல் ஜப்பார் மற்றும் அதிகாரிகள் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.

Next Story