மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் குழந்தைகளுடன் பரிதவித்த பார்வையற்ற பெண் + "||" + A blind woman with children in Erode

ஈரோட்டில் குழந்தைகளுடன் பரிதவித்த பார்வையற்ற பெண்

ஈரோட்டில் குழந்தைகளுடன் பரிதவித்த பார்வையற்ற பெண்
ஈரோட்டில் குழந்தைகளுடன் பார்வையற்ற பெண் பரிதவித்து வருகிறார்.
ஈரோடு, 

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழிலாளர்கள் பலர் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். மேலும், அவசர வேலையாகவும், பணி நிமித்தமாகவும் வெளியூர் சென்றவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் மிகவும் சிரமப்படுகிறார்கள். இது அந்த குடும்பத்தினரையும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது.

அதுபோல் ஈரோட்டில் பார்வையற்ற ஒரு பெண் தனது குழந்தைகளுடன் பரிதவித்து வருகிறார். அவரது பெயர் கலைவாணி (வயது 36). சேலம் மாவட்டத்தை சேர்ந்த அவர் பார்வை குறைபாடுடைய குணசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தமிழ்மகன் (6) என்ற மகனும், மகாலட்சுமி (2) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் ஈரோடு அருகே வெள்ளோட்டில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார்கள்.

குணசேகரும், கலைவாணியும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொம்மைகளை ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வருகிறார்கள். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு ஈரோடு ரெயில் நிலையத்துக்கு வந்து தங்கினார்கள்.

இந்த நிலையில் திருச்சியில் உள்ள உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தாயை குணசேகர் பார்க்க சென்றார். அதன்பிறகு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் குணசேகர் ஈரோட்டிற்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வேலை இல்லாத நிலையில் பாதுகாப்பு கருதி கலைவாணி தனது குழந்தைகளுடன் பவானியில் உள்ள ஒரு பெண் மாற்றுத்திறனாளி வீட்டில் சென்று தங்கியிருந்தார். அந்த வீட்டின் உரிமையாளர் நீண்ட நாட்கள் தங்கக்கூடாது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலைவாணி தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

ஈரோடு வந்த கலைவாணி வீரப்பன்சத்திரத்தில் உள்ள மற்றொரு மாற்றுத்திறனாளி பெண்ணின் வீட்டில் தங்கியுள்ளார். அங்கும் அவருக்கு நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டதால், நேற்று காலை வீட்டில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு எங்கு செல்வது என்றே தெரியாமல் பரிதவித்த அவர், தனது குழந்தைகளை அழைத்து கொண்டு ஈரோடு காந்திஜிரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஒருசிலர் கலைவாணியிடம் விசாரித்தபோது அவரது நிலையை நினைத்து கவலை அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த உணர்வுகள் என்ற தன்னார்வ அமைப்பின் தலைவர் மக்கள் ஜி.ராஜன், பார்வையற்ற பெண்ணுக்கு உதவ முன்வந்தார். அவர் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவனிடம் அனுமதிபெற்று கலைவாணியையும், அவரது குழந்தைகளையும் ஆதரவற்றோர் தங்க வைக்கப்பட்டுள்ள கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளிக்கூடத்தில் தங்க வைத்தார். அங்கு ஜீவிதம் அறக்கட்டளையினர் ஆதரவற்றோருடன் சேர்த்து கலைவாணியையும், குழந்தைகளையும் பராமரித்து வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோட்டில் கனி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணி தீவிரம்
ஈரோட்டில் கனி மார்க்கெட் கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
2. மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிக்க எதிர்ப்பு
மகளிர், குழந்தைகள் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. ஈரோட்டில் கொரோனாவுக்கு வாலிபர் பலி: உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு
ஈரோட்டில் கொரோனாவுக்கு வாலிபர் பலியானார். அவரது உடலை அடக்கம் செய்ய சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4. ஈரோடு காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை - மாநகராட்சி சார்பில் நடந்தது
ஈரோடு மாநகராட்சி சார்பில் காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.
5. ஈரோட்டில் குடோனில் தீ விபத்து: லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள துண்டுகள் எரிந்து நாசம்
ஈரோட்டில் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துண்டுகள் எரிந்து நாசம் ஆனது.

ஆசிரியரின் தேர்வுகள்...