யானையை மீட்க சென்ற போது பரிதாபம்: காண்டூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வனக்காவலர் பலி


யானையை மீட்க சென்ற போது பரிதாபம்: காண்டூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வனக்காவலர் பலி
x
தினத்தந்தி 11 May 2020 4:30 AM IST (Updated: 11 May 2020 3:09 AM IST)
t-max-icont-min-icon

யானையை மீட்க சென்ற போது காண்டூர் கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வனக்காவலர் பலியானார். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது.

தளி, 

பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பருத்தியூர்பீட் பகுதியில் நேற்று முன்தினம் காண்டூர் கால்வாய்க்கு தண்ணீர் குடிப்பதற்கு வந்த 7 வயது மதிக்கத்தக்க ஆண்யானை கால்வாயில் தவறி விழுந்து விட்டது. இது குறித்த தகவலின் பேரில் வனச்சரக அலுவலர் தனபாலன் தலைமையிலான வனத்துறையினர் கரட்டூர்பீட் பகுதியில் கால்வாயில் தத்தளித்துக்கொண்டிருந்த யானையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கால்வாயில் தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்ததால் யானையை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கபட்டு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றது. பல மணிநேர போராட்டத்திற்கு பின்பு யானையை இறந்த நிலையில் வனத்துறையினர் மீட்டனர்.

இந்த போராட்டத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த வனக்காவலர் சந்துரு(வயது 24) எதிர்பாராத விதமாக தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிகிறது. அதன்பின்பு வனத்துறையினர் அவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் இரவு நேரமாகி விட்டதால் தேடும் பணிகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் உடுமலையைச் சேர்ந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் சிறப்பு கமாண்டோ படைவீரர்களும் நேற்று காலை திருமூர்த்தி அணைப்பகுதியில் தொடர்ந்து சந்துருவை தீவிரமாக தேடி வந்தனர். அவரை தேடுவதற்கு ஏதுவாக நேற்று காலை காண்டூர் கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டு பின்னர் மதியம் திறக்கப்பட்டது. நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு நேற்று மாலை காண்டூர் கால்வாயில் இருந்து சந்துரு சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடலை தளி போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா சேர்ந்த வனக்காவலர் சந்துரு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு வனத்துறையில் பணியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story