மாவட்ட செய்திகள்

திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் சென்ற 1,140 தொழிலாளர்கள் + "||" + 1,140 workers on special train from Tirupur to Bihar

திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் சென்ற 1,140 தொழிலாளர்கள்

திருப்பூரில் இருந்து பீகாருக்கு சிறப்பு ரெயிலில் சென்ற 1,140 தொழிலாளர்கள்
திருப்பூரில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திருப்பூரில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் 1,140 தொழிலாளர்கள் நேற்று பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
திருப்பூர், 

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களில் ஒடிசா, பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். அதேபோல தமிழகத்தில் உள்ள பிறமாவட்டங்களை சேர்ந்தவர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வருவதால், மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.

ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட போது ரெயில் வசதி இல்லாத காரணத்தினால் வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் பல்வேறு சிரமத்தை சந்தித்தனர். தங்களை சொந்த ஊருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே மத்திய அரசு கடந்த 28-ந் தேதி வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அறிவித்தது.

இதன்பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தங்கள் ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை கொடுத்து சொந்த ஊருக்கு செல்வதற்கு பதிவு செய்தனர். மேலும், பலர் இணையதளம் மற்றும் செல்போன் மூலமாகவும் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததால், வடமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியை தீவிரப்படுத்தியது. இதைத்தொடர்ந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு பதிவு செய்தவர்களில் பீகாரை சேர்ந்தவர்களுக்காக திருப்பூரில் இருந்து பீகார் முஜாப்பூர்நகர் வரை செல்லும் ஒரு சிறப்பு ரெயில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பீகாரை சேர்ந்த தொழிலாளர்களுக்காக முதற்கட்டமாக இந்த ரெயில் இயக்கப்பட்டது. பீகாரின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 1,140 பேருக்கு நேற்று சிறப்பு ரெயில் இயக்கப்படுவது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று மதியம் 2 மணிக்கு இந்த ரெயில் புறப்படும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக காலையில் இருந்தே திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு, பதிவு செய்த தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது.

திருப்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து தொழிலாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் சிறப்பு ரெயிலில் ஏறி அமர்ந்தனர். சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேறியதால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னதாக அவர்கள் செல்லும் சிறப்பு ரெயிலில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அனைத்து தொழிலாளர்களுக்கும் உணவு மற்றும் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டது.

சிறப்பு ரெயில் இயங்குவது தொடர்பான தகவல் வடமாநில தொழிலாளர்கள் பலருக்கும் தெரிந்து, அதிகமானவர்கள் வரக்கூடும் என்பதால், நேற்று ரெயில் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ரெயிலில் பயணம் செய்ய விண்ணப்பித்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் அழைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்த 1,140 பேரில் உடுமலை சைனிக் பள்ளியில் படித்து வந்த பீகாரை சேர்ந்த 45 பேரும் சொந்த ஊர்களுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கும் ரெயில் நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

நேற்று மதியம் 2 மணிக்கு புறப்படுவதாக இருந்த சிறப்பு ரெயில் தொழிலாளர்கள் வருவதற்கு தாமதமானதால் மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. வழியில் எங்கும் நிற்காமல் இன்று (திங்கட்கிழமை) மாலை பீகாரை ரெயில் சென்றடைகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.
2. கனமழைக்கு 74 வீடுகள் சேதம்: முகாம்களில் 1,000 பேர் தங்க வைப்பு
நீலகிரியில் கனமழைக்கு 74 வீடுகள் சேதம் அடைந்தன. நிவாரண முகாம்களில் 1,000 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
3. திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
திருப்பூரில் தொடர் வழிப்பறி, வீடு மற்றும் கடைகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. மும்பையில் புதிதாக 1,105 பேருக்கு கொரோனா 49 பேர் பலி
மும்பையில் புதிதாக 1,105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.49 பேர் உயிரிழந்தனர்.
5. இந்தியாவில் 1,600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை: அனுமதி கேட்டு விண்ணப்பம்
இந்தியாவில் 1,600 பேருக்கு ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் இந்திய மருந்து நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.