கோடையில் இருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்? - பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை


கோடையில் இருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்? - பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 11 May 2020 4:15 AM IST (Updated: 11 May 2020 3:32 AM IST)
t-max-icont-min-icon

கோடையில் இருந்து பாதுகாக்க என்ன செய்யலாம்? என்பது குறித்து பொதுமக்களுக்கு கலெக்டர் பொன்னையா அறிவுரை வழங்கி உள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை வெயிலின் வெப்ப கதிர்வீச்சு பொதுமக்களுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஆகவே பொதுமக்கள் வெப்பத்தாக்கம் தொடர்பாக அவ்வப்போது தொலைக் காட்சி, வானொலி, செய்தித்தாள்களில் அரசால் வெளியிடப்படும் அறிவுரைகளை கவனித்தல் வேண்டும்.

அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். பருத்தியால் தயாரிக்கப்பட்ட, எடைகுறைவான, தளர்வான மற்றும் வெளிர்நிற ஆடைகளை உடுத்த வேண்டும், வெளியில் செல்லும் போது தொப்பி அல்லது குடை, போன்றவற்றை பயன்படுத்த வேண்டும்.

குடிநீர் எடுத்து செல்ல வேண்டும். உடல் வெப்பத்தை தணிக்க அவ்வப்போது தண்ணீர், வீட்டில் தயாரித்த மோர், எலுமிச்சை சாறு, கஞ்சி, கூழ், பழச்சாறு, இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும். வெயில் பாதிப்பால் அசதி, தலைவலி, மயக்கம் போன்றவை தோன்றினால் உடனடியாக மற்றவர் உதவியுடன் ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.

கால்நடைகளை நிழலில் வைத்து பராமரிக்க வேண்டும். அவற்றிற்கு தேவையான அளவு குடிநீர் வழங்க வேண்டும், நமது வசிப்பிடத்தை பகல் நேரங்களில் திரைச்சீலைகளால் மறைத்தும், இரவு நேரங்களில் ஜன்னல்களை திறந்து வைத்தும் காற்றோட்டத்துடன் குளிர்ச்சியாக இருக்குமாறு அமைத்து கொள்ள வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள்

வேலை செய்யும் இடங்களில் அனைவருக்கும் குளிர்ந்த குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், அடிக்கடி குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். கடும் வெயில் நேரத்தில் சூரிய ஒளியின் நேரடி தாக்குதல் ஏற்படாதவாறு பணிகளை மேற்கொள்ள திட்டமிட வேண்டும். குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் உடல்நலம் குன்றியவர்களை வெப்பதாக்கம் இல்லாத பகுதிகளில் வைத்து பராமரிக்கவேண்டும்.

வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அருகில் குழந்தைகளையும், செல்ல பிராணிகளையும் செல்ல விடக்கூடாது, வெயில் நேரத்தில் கருமை நிற ஆடைகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை அணியக்கூடாது.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது கடுமையான பணிகளை செய்யக்கூடாது. காபி, தேநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் மது போன்றவற்றை குடிக்க கூடாது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story