கூடுவாஞ்சேரி அருகே, வேன் கிளனர் குத்திக்கொலை - பூ வியாபாரி கைது


கூடுவாஞ்சேரி அருகே, வேன் கிளனர் குத்திக்கொலை - பூ வியாபாரி கைது
x
தினத்தந்தி 10 May 2020 11:15 PM GMT (Updated: 10 May 2020 10:16 PM GMT)

கூடுவாஞ்சேரி அருகே வேன் கிளனர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பூ வியாபாரி கைது செய்யப்பட்டார்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்த சேலையூர் பாலாஜி நகர் நெல்லூரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம் (வயது 48), இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் கிளனராக வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் காலை கூடுவாஞ்சேரியை அடுத்த பெருமாட்டுநல்லூர் ஊராட்சி தர்காஸ் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு விநாயகம் தனது நண்பர் ரகு என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

நேற்றுமுன்தினம் பகல் முழுவதும் தாய் வீட்டில் இருந்தார். பின்னர் இரவு தர்காஸ் கிராமத்தில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக பணிபுரியும் முத்துபாண்டி வீட்டுக்கு விநாயகம் மற்றும் அவரது நண்பர் ரகு இருவரும் சென்றனர்.

விநாயகம், ரகு, முத்துபாண்டி அவரது மகன் பூ வியாபாரி வாசு ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது குடித்தனர். பின்னர் விநாயகம், ரகு இருவரும் அங்கேயே படுத்து தூங்கி விட்டனர். நேற்று காலையில் விநாயகம், ரகு, முத்துபாண்டி, வாசு ஆகியோர் மீண்டும் மது குடித்தனர்.

விநாயகத்திற்கும், வாசுவுக் கும் ஏற்கனவே பணம் கொடுக் கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலை மது குடிக்கும்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த வாசு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விநாயகத்தின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து விநாயகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த ரகு பயத்தில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விநாயகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து மாந்தோப்பில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விநாயகத்தை கத்தியால் குத்திக்கொலை செய்து விட்டு காரணைப்புதுச்சேரி வழியாக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வாசுவை கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் கைது செய்தார். தொடர்ந்து வாசுவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story