தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 22 லட்சம் டன் நெல் கொள்முதல் அமைச்சர் காமராஜ் தகவல்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரையில், 22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் கூறினார்.
திருவாரூர்,
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இதுவரையில், 22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் கூறினார்.
தொகுப்பு பெட்டி
திருவாரூரில் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்துறை கலைஞர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டி வழங்கப்பட்டது. இந்த தொகுப்பு பெட்டிகளை அமைச்சர் காமராஜ் வழங்கினார்.
இதில் சிவாச்சாரியார்கள், கிராம கோவில் பூசாரிகள், கைவினை கலைஞர்கள், இசை கலைஞர்கள், சமையல் கலைஞர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்துவோர், ஆட்டோ ஓட்டுனர்கள், மயான தொழிலாளர்கள், இருசக்கர வாகன பழுது பார்ப்போர், திருநங்கைகள் ஆகிய 2 ஆயிரம் பேருக்கு தொகுப்பு பெட்டி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் மூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் மணிகண்டன், சேகர், பாஸ்கர், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்்.
அச்சப்பட வேண்டாம்
பின்னர்் அமைச்சர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று சமூக பரவல் என்கிற நிலைக்கு வரவில்லை. இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் உள்ளது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் 32 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் தற்போது 3 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனவே பொதுமக்கள் வைரஸ் தாக்குதல் குறித்து அச்சப்பட வேண்டாம். அதே நேரத்தில் மக்கள் எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் 1 லட்சத்து 25 ஆயிரம்் குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டி வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் விவசாயப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஆறு குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் தூர்வாரப்பட உள்ளது. விவசாய சங்கங்களை இணைத்து குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும்.
22 லட்சம் டன் நெல் கொள்முதல்
இந்த ஆண்டைப்போல் வரும் ஆண்டும் குறுவை, சம்பா நெல் சாகுபடி சிறப்பாக இருக்கும். மேட்டூர் அணை திறப்பது குறித்து முதல்-அமைச்சர் விரைவில் முடிவு எடுத்து அறிவிப்பார். விவசாய பணிகளுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதுவரை காவிரி டெல்டா உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக 22 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 6 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 20 சதவீதம் நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கினை முன்னிட்டு விலையில்லாமல் வழங்கப்படும் கூடுதல் அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் 60 சதவீதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நன்னிலம்
இதேபோல் நன்னிலம், முடிகொண்டான், கொல்லாபுரம், மேனாங்குடி ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் அரிசி மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு பெட்டிகளை அமைச்சர் காமராஜ் வீடு, வீடாக சென்று வழங்கினார். இதில் முன்னாள் எம்.பி. கோபால், ஒன்றியக்குழு தலைவர் விஜயலட்சுமி, துணைத்தலைவர் அன்பழகன், கூட்டுறவு சங்க தலைவர்கள் ராம.குணசேகரன், புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story