ஊரடங்கு நேரத்தில் புற்றுநோயால் அவதிப்பட்ட பெண்ணுக்கு இலவச மருந்துக்கு கலெக்டர் ஏற்பாடு பொதுமக்கள் பாராட்டு
ஊரடங்கு நேரத்தில் புற்றுநோயால் அவதிப்பட்ட பெண்ணுக்கு கலெக்டர் முயற்சியால் இலவசமாக மருந்து வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்,
ஊரடங்கு நேரத்தில் புற்றுநோயால் அவதிப்பட்ட பெண்ணுக்கு கலெக்டர் முயற்சியால் இலவசமாக மருந்து வழங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கு தாக்கம்
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு தவிர பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டது. வெளியூர் செல்லவும் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அத்தியாவசிய தேவைக்காக யாராவது செல்ல வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று செல்ல வேண்டும்.
இதே போல் வெளி மாவட்டங்களில் இருந்து யாருக்காவது அத்தியாவசிய பொருட்களான மருந்து உள்ளிட்டவை வேண்டுமானால் மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில் தன்னார்வலர்கள், மருந்து நிறுவனங்கள் மூலம் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
புற்றுநோயால் பெண் பாதிப்பு
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள சேகர் காலனியில் வசித்து வருபவர் சிவாஜி. மீன் வியாபாரியான இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு திருமணம் ஆகி 25 வருடங்கள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி, கடந்த சில ஆண்டுகளாக ரத்த புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். டாக்டரின் ஆலோசனையின் பேரில் அவர் மருந்து சாப்பிட்டு வருகிறார்.
இந்த நிலையில் மருந்து தீர்ந்து விட்டதால், கிருஷ்ணவேணி தஞ்சையில் உள்ள பல்வேறு மருந்து கடைகளில் தனக்கு தேவையான மருந்தை கேட்டுப்பார்த்தார். எந்த மருந்து கடையிலும் அவர் கேட்ட மருந்து கிடைக்கவில்லை.
இதையடுத்து செய்வதறியாக திகைத்த அவர், தஞ்சை மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கலெக்டர் கோவிந்தராவ் உத்தரவின் பேரில் வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் முகமது கமாலுக்கு தகவல் தெரிவித்து கிருஷ்ணவேணிக்கு தேவையான மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
24 மணி நேரத்தில் ஏற்பாடு
உடனடியாக அவர் தஞ்சை மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் மருந்து வணிகர்கள் வெற்றிவேல், பாலாஜி ஆகியோர் கிருஷ்ணவேணிக்கு ே-வையான மருந்து தஞ்சை மாவட்டத்தில் எங்கும் இல்லாததால் திருச்சி மாவட்டத்தில் இருந்து பெறுவதற்கு முயற்சி மேற்கொண்டனர். ரூ.18 ஆயிரம் மதிப்பிலான அந்த மருந்து வரவழைக்கப்பட்டு நேற்று கிருஷ்ணவேணியிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் அவருக்கு கையுறை, முககவசம், சானிடைசர் போன்றவற்றையும் மருந்து வணிகர்கள் வழங்கினர். அவற்றை கண்ணீர் மல்க பெற்றுக்கொண்ட கிருஷ்ணவேணி-சிவாஜி தம்பதியினர், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், மருந்து வணிகர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம் மற்றும் மருந்து வணிகர்களின் இந்த செயலுக்கு பொதுமக்கள் பெரிதும் பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story