சென்னையில், காய்கறி-பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு - நிலைமை சீராவது எப்போது?
சென்னையில் காய்கறி, பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் கடைகளுக்கு சென்று எதிர்பார்த்த பொருட்கள் கிடைக்காததால் வெறும் கையுடன் மக்கள் வீடு திரும்பும் சூழ்நிலை நிலவுகிறது.
சென்னை,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டு உள்ளது. அதேவேளை சென்னையை அடுத்த திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டதால் நகரில் கடந்த சில நாட்களாக காய்கறி, பழங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
நகரில் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக காய்கறி சந்தைகளிலும் பெரும்பாலான காய்கறி இல்லாத நிலையே நிலவுகிறது. தள்ளுவண்டி கடைகளிலும், பலசரக்கு கடைகளிலும் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை தவிர எந்த காய்கறியையும் பார்க்க முடிவதில்லை. அதேவேளை ஒரு சில கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் ஓரளவு காய்கறி இருந்தாலும் அவற்றின் விலை இருமடங்காக உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான கடைகளில் விரும்பிய காய்கறி கிடைப்பதில்லை. கிடைக்கும் கடைகளிலும் ‘கிடுகிடு’ விலை உயர்வு இருக்கிறது. இதனால் காய்கறி வாங்கவே மக்கள் அச்சப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.
பழங்களுக்கும் தட்டுப்பாடு
காய்கறி போலவே பழங்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டதை தொடர்ந்து, மாதவரம் பஸ் நிலையத்துக்கு பழக்கடைகள் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் மாதவரம் பஸ் நிலையத்தில் எதிர்பார்த்த பழக்கடைகள் இன்னும் அமையவில்லை என்றுதான் சொல்ல முடியும். வாழைத்தார், சாத்துக்குடி, ஆரஞ்சு, பப்பாளி போன்ற ஒரு சில பழக்கடைகள் மட்டுமே அங்கு அமைந்துள்ளன.
பழமுதிர்ச்சோலைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களிலுமே ஓரளவு பழ வகைகளை பார்க்க முடிகிறது. அப்படி விற்பனையாகும் பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அனைத்து பழங்களின் விலையும் ரூ.20 முதல் 40 வரை உயர்ந்திருக்கிறது.
விலை உயர்வு
தற்போது சூப்பர் மார்க்கெட்களில் ஆப்பிள், பப்பாளி, திராட்சை, அன்னாசிபழம், சாத்துக்குடி, ஆரஞ்சு, மாதுளை, சப்போட்டா, கொய்யா ஆகிய பழங்கள் கிடைத்தாலும் அவற்றின் உயர்ந்திருக்கிறது. அல்போன்சா, பங்கனபள்ளி ரக மாம்பழங்கள் மார்க்கெட்டுக்கு வந்தாலும் அவற்றின் விலையும் உயர்ந்தே காணப்படுகிறது.
இதனால் பழங்கள் வாங்கி வரலாம் என்று கடைகளுக்கு செல்லும் மக்கள் எதிர்பார்த்த பழங்கள் இல்லாமல் வெறும் கையுடனேயே வீடு திரும்ப வேண்டியுள்ளது.
மலைக்க வைக்கும் விலை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
காய்கறி, பழங்களின் விலை இவ்வளவு உயரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. கடைகளிலும் வாழை, சாத்துக்குடி, ஆரஞ்சு, மாம்பழம் தவிர எந்த பழங்களும் அவ்வளவாக கிடைப்பதில்லை. பழங்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து மலைக்க வைக்கிறது. இப்படி இருந்தால் பழங்களை எப்படி வாங்கி சாப்பிட மனம் வரும்?. பழங்களின் விலையை கட்டுப்படுத்த அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். நிலைமை எப்போது சீராகும்? என்ற எதிர்பார்ப்பே நிலவுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story