மராட்டியத்தில் ஊரடங்கால் சிக்கி தவிக்கும் மக்களுக்காக மாவட்டங்களுக்கு இடையே பஸ் வசதி - இன்று முதல் இயக்கப்படுகிறது
மராட்டியத்தில் ஊரடங்கால் சிக்கி தவிக்கும் மக்களுக்காக மாவட்டங்கள் இடையே இன்று முதல் இலவச பஸ் இயக்கப்படுகிறது.
மும்பை,
மராட்டியத்தில் ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன. இதனால் பலர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் ஆங்காங்கே சிக்கிக் கொண்டனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பும் வகையில் இன்று(திங்கட்கிழமை) முதல் இலவச பஸ்களை இயக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநில போக்குவரத்து துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அனுமதி பெறவேண்டும்
ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்து வரும் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் பலருக்கும் உதவும் வகையில் மாவட்டங்களுக்கு இடையே இலவச பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இருப்பினும் தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் மக்களுக்கு இந்த பஸ்சில் பயணிக்க அனுமதி அளிக்கப்படாது.
போலீஸ் கமிஷனரகம் உள்ள நகரங்களில் சிக்கித் தவிக்கும் மக்கள் துணை கமிஷனரிடம் தங்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்ய தேவையான அனுமதியை பெறவேண்டும்.
மற்ற இடங்களில் உள்ளவர்கள் மாவட்ட கலெக்டர் அல்லது தாசில்தார் ஆகியோரிடம் அனுமதி பெறவேண்டும்.
சமூக இடைவெளி
இவ்வாறு அனுமதி பெற்றவர்கள் தங்கள் விவரங்களுடன் பெறப்பட்ட அனுமதி கடிதத்தையும் இணைத்து இணையதளம் மூலமாக பயணம் செய்ய விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பித்த 22 நபர்களுக்கு ஒரு பஸ் ஏற்பாடு செய்யப்படும். பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்து இருக்க வேண்டும்.
பஸ்சில் ஏறும்போது கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பயணத்தின்போது அனைவரும் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஊரடங்கு காரணமாக எந்த கடையிலும் உணவுக்காக பஸ்கள் நிறுத்தப்படாது. எனவே பயணிகள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை முன்பே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story