அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் தடுப்புகள் அகற்றம்


அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் தடுப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 10 May 2020 11:19 PM GMT (Updated: 10 May 2020 11:19 PM GMT)

அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் உள்ள தடுப்புகளை அகற்ற முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார்.

அரியாங்குப்பம்,

அரியாங்குப்பம் சொர்ணா நகரில் 3 பேருக்கு கொரோனா தொற்று காரணமாக மேற்கு பஞ்சாயத்திற்குட்பட்ட பகுதிகள் சீல் வைத்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 3 பேரும் குணமடைந்ததாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். கடைசியாக குணமடைந்த நபரை தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதன் காரணமாக அரியாங்குப்பம் பகுதியில் யாருக் கும் கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பே, முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜேஷ் கண்ணா உள்ளிட்டோர் கோட்டைமேடு பகுதிக்கு நேரில் வந்து அப்பகுதி மக்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் தடுப்புகள் அகற்றப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் அரியாங்குப்பம் கோட்டைமேடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு பகுதியில் நூற்றுக் கணக்கானோர் நேற்று முன்தினம் காலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

தடுப்புகள் அகற்றம்

இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரி கலெக்டர் அருண் அனுமதியோடு தாசில்தார் ராஜேஷ்கண்ணா சொர்ணா நகரில் உள்ள சில வீதிகளை தவிர்த்து, மேற்கு பஞ்சாயத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தடுப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் கோட்டைமேடு பகுதியின் நுழைவு வாயிலில் வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன.

ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜேஷ்கண்ணா, போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் ஆகியோர் கோட்டைமேடு பகுதியில் போடப்பட்டிருந்த தடுப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழிவகை செய்தனர். அதனை தொடர்ந்து அந்த பகுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் ஒலிப்பெருக்கி மூலமாக, “ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. வெளியே வந்து செல்லும் நேரத்தினை தவறாமல் பின்பற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளியே செல்லும் போது கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும். யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்” என பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. கூறினார்.


Next Story