லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி தாராசுரம் மார்க்கெட்டுக்கு ‘சீல்’


லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி தாராசுரம் மார்க்கெட்டுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 11 May 2020 4:49 AM IST (Updated: 11 May 2020 4:49 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தில் இருந்து தாராசுரம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தாராசுரம் மார்க்கெட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

கும்பகோணம், 

உத்தரபிரதேசத்தில் இருந்து தாராசுரம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு ஏற்றி வந்த லாரி டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தாராசுரம் மார்க்கெட்டுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தாராசுரம் மார்க்கெட்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்தில் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இது தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய மார்க்கெட்டுகளில் ஒன்றாகும். இந்த மார்க்கெட்டிற்கு மராட்டியம், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். இங்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும்.

இந்த நிலையில் தாராசுரம் மார்க்கெட்டில் உள்ள ஒரு மொத்த விற்பனையாளருக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து லாரியில் உருளைக்கிழங்கு கொண்டு வரப்பட்டது. இந்த லாரியை ஓட்டி வந்த டிரைவருக்கு கும்பகோணம்-சென்னை சாலையில் உள்ள நீலத்தநல்லுார் சோதனை சாவடியில் கடந்த 8-ந் தேதி கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

டிரைவருக்கு கொரோனா

இதில் டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து கும்பகோணம் நகராட்சி சார்பில், மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த 450 கடைகளில் உள்ள காய்கறிகளை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதையடுத்து காய்கறிகளை 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கொண்டு 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறி உரிமையாளர்கள் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய அப்புறப்படுத்தினர். கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி, நகர் நல அலுவலர் பிரேமா, கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார், ராமமூர்த்தி, நாகலெட்சுமி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

மார்க்கெட்டுக்கு ‘சீல்’

இதையடுத்து காய்கறி மார்க்கெட்டுக்கு அருகே தடுப்பு அமைக்கப்பட்டு அந்த வழியாக வந்தவர்கள் அனைவரைை-யும் போலீசார் திருப்பி அனுப்பினர்.

இதைத்தொடர்ந்து மார்க்கெட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். மேலும் காய்கறி மார்கெட்டுக்கு வந்த அனைத்து வாகனங்களுக்கும் நவீன் மோட்டார் எந்திரங்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் கவச உடை அணிந்த 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இது குறித்து கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமி கூறியதாவது:-

கும்பகோணம் நகராட்சிக்கு சொந்தமான தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து லாரியில் உருளைக்கிழங்கு ஏற்றி வந்த டிரைவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் காய்கறி மார்க்கெட் இன்று முதல் (திங்கட்கிழமை) இயங்காது. மேலும் இந்த மார்க்கெட்டில் வேலைபார்த்த 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கொரோனா சோதனை செய்யப்படும். பின்னர் சோதனை முடிவின் தன்மைக்கேற்று மீண்டும் காய்கறி மார்க்கெட் இதே இடத்தில் இயங்கும். அதுவரை காய்கறி மார்க்கெட் இயங்க மாற்று இடம் ஏற்பாடு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினந்தோறும் ஆயிரக்கணக்கான சில்லறை வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து சென்ற காய்கறி மார்க்கெட்டில் வேலைபார்த்த டிரைவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதால் கும்பகோணம் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story