எம்.எல்.சி. தேர்தல்: உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர் போட்டியின்றி தேர்வு ஆகிறார்கள்
மராட்டியத்தில் நடைபெறும் எம்.எல்.சி. தேர்தலில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட 9 பேர் போட்டியின்றி தேர்வு ஆக வழி பிறந்துள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் 9 எம்.எல்.சி.களின் பதவிக்காலம் கடந்த 24-ந் தேதியுடன் முடிவடைந்தது. கொரோனா பிரச்சினையால் தள்ளிவைக்கப்பட்ட இந்த தேர்தல் வருகிற 21-ந்தேதி நடக்கிறது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்கான தேர்தல் இதுவென்பதால், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எனவே ஆளும் சிவசேனா சார்பில் வேட்பாளர்களாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, தற்போதைய மேல்-சபை துணை தலைவர் நீலம்கோரே ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா 4 வேட்பாளர்களை அறிவித்து உள்ளது.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்
இதையடுத்து சிவசேனாவுடன் ஆட்சியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளான தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தலா 2 வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. இதன்படி தேசியவாத காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சசிகாந்த் ஷிண்டே, அமோல் மித்காரியும், காங்கிரஸ் சார்பில் ராஜ்கிஷோர் மற்றும் ராஜேஷ் ரத்தோடு ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.
9 எம்.எல்.சி. பதவிகளுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மொத்தம் 10 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதன் மூலம் இந்த எம்.எல்.சி. தேர்தலில் போட்டி உறுதி என்று எதிர்பார்க்கப்பட்டது. ஒவ்வொரு எம்.எல்.சி.யை தேர்வு செய்ய தலா 29 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிக்க வேண்டும்.
திடீர் திருப்பம்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 2 பேரில் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் பாலசாகேப் தோரட் நேற்று இரவு அறிவித்தார். அதன்படி ஆளும் கூட்டணி சார்பில், சிவசேனா-2, தேசியவாத காங்கிரஸ்-2, காங்கிரஸ்-1 என்ற கணக்கில் 5 பேர் வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
இதனால் எம்.எல்.சி. தேர்தலில் ஆளும் கூட்டணியில் நீடித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் ஆளும் கூட்டணி கட்சிகள் சார்பில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்பட 5 பேரும், எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா சார்பில் 4 பேரும் போட்டியின்றி தேர்வு ஆக வழி பிறந்து உள்ளது. இதனால் வருகிற 21-ந் தேதி நடைபெற இருக்கும் தேர்தல் அவசியம் இல்லாமல் போகிறது.
இன்று கடைசி நாள்
இதற்கிடையே வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் ஆகும். நாளை (செவ்வாய்க்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 14-ந் தேதி வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும்.
இந்த நடைமுறைகள் பின்பற்றப்பட்டதை தொடர்ந்து, வேட்பு மனு செய்யும் 9 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இந்திய தேர்தல் கமிஷன் அறிவிக்க உள்ளது.
Related Tags :
Next Story