தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கால் சிக்கி தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் 2,300 பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம்


தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கால் சிக்கி தவித்த வெளிமாநில தொழிலாளர்கள் 2,300 பேர் சொந்த ஊர் செல்ல விருப்பம்
x
தினத்தந்தி 11 May 2020 5:17 AM IST (Updated: 11 May 2020 5:17 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கால் சிக்கி தவித்த வெளிமாநிலத்தை சேர்ந்த 2,300 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கால் சிக்கி தவித்த வெளிமாநிலத்தை சேர்ந்த 2,300 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்தனர். இதையடுத்து முதல்கட்டமாக தஞ்சையில் இருந்து 4 பஸ்களில் மராட்டிய மாநில தொழிலாளர்கள் 113 பேர் சொந்த ஊர் புறப்பட்டனர்.

வெளிமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கினால் வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாமல் தஞ்சை மாவட்டத்தில் சிக்கிக்கொண்டனர். இவர்களை மாவட்ட நிர்வாகம் கண்டறிந்து அந்தந்த பகுதியில் உள்ள கல்வி நிலையங்களில் தங்க வைத்து, தன்னார்வலர்கள் மூலம் உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர்.

கரும்பு வெட்டும் தொழில் செய்வதற்காக தஞ்சை வந்த மராட்டிய மாநிலத்தை சேர்ந்த 113 தொழிலாளர்கள் வேலை முடிந்தும் ஊரடங்கினால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இவர்கள் அனைவரும் கடந்த 17 நாட்களாக தஞ்சையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

113 பேர் புறப்பட்டனர்

இந்த நிலையில், இவர்கள் 4 பஸ்களில் நேற்று இரவு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களது உடைமைகளை கொண்டு செல்ல மராட்டியத்தில் இருந்து 4 லாரிகள் வந்தன. இவற்றில் அவர்களுடைய உடைமைகள் எடுத்து செல்லப்பட்டன. முன்னதாக இவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரிய வந்தது.

இவர்களை வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தாசில்தார் வெங்கடேசன், வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் நெடுஞ்செழிய பாண்டியன், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் சுஜாதா பாரதிதாசன், கிராம நிர்வாக அதிகாரி வாசுதேவன் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் வழியனுப்பி வைத்தனர்.

கலெக்டர் பேட்டி

முன்னதாக நேற்று காலை தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு வருகிற 17-ம் தேதி வரை தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தொடரும். தஞ்சை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் 4,369 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் 2,300 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர்.

அதேபோல் பிற மாநிலங்களில் இருந்து 125 பேர் தஞ்சை மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட ஊரணிபுரம் பகுதியில் அமல்படுத்தப்பட்ட தடை உத்தரவு விலக்கி கொள்ளப்படுகிறது. பிற பகுதிகளில் தடை உத்தரவு தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்

முழுமையாக கண்காணிப்பு

தஞ்சை மண்டல கொரோனா தடுப்பு கண்காணிப்புக்குழு அலுவலர் சண்முகம் கூறுகையில், “தஞ்சை மாவட்டத்துக்குள் வெளிமாவட்டத்தினர் வரும் எல்லைகள் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்த 24 பேரில் 6 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து வந்த 1,203 பேரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளும், 100 நாள் வேலைப் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது” என்றார்.

Next Story