பாஸ் வழங்கப்படுவதாக வதந்தி: நேதாஜி மைதானத்தில் திரண்ட வடமாநிலத்தவர்கள்


பாஸ் வழங்கப்படுவதாக வதந்தி: நேதாஜி மைதானத்தில் திரண்ட வடமாநிலத்தவர்கள்
x
தினத்தந்தி 10 May 2020 11:56 PM GMT (Updated: 10 May 2020 11:56 PM GMT)

நேதாஜி மைதானத்தில் பாஸ் வழங்கப்படுவதாக தகவல் பரவியதால் அங்கு சொந்த ஊருக்கு திரும்ப காத்திருந்த வடமாநிலத்தவர்கள் திரண்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர், 

வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் வேலூருக்கு வருகின்றனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் சிகிச்சை முடிந்தும் அவர்களால் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியவில்லை. கையிலிருந்த பணமும் தீர்ந்து உணவுக்காக தவிக்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

இந்த நிலையில் அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி பல நாட்களாக வேலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசு நடவடிக்கையால் வேலூர் மாவட்ட நிர்வாகத்தின மூலம்ர் ஜார்க்கண்ட், பீகார் மற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிறப்பு ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் வேலூர் நேதாஜி மைதானத்தில் மேற்கு வங்காள மாநிலத்துக்கு செல்பவர்களுக்கு பாஸ் வழங்கப்படுவதாக வடமாநிலத்தவர்களுக்கு இடையே வதந்தி பரவியது. இதனால் சிகிச்சைக்காக வந்தவர்களும், இங்கு பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களும் நேற்று காலையிலேயே அங்கு வரத்தொடங்கினர். மைதானத்தின் நுழைவு வாயில் முன்பு அவர்கள் சமூக இடைவெளி இல்லாமல் திரண்டிருந்தனர்.

நேரம் செல்ல செல்ல அங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை. அப்போது தான் அவர்களுக்கு பாஸ் வழங்குவது வதந்தி என தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமானார்கள். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story