ஊரடங்கு படுத்தும்பாடு: சலூன் கடைகள் திறக்கப்படாததால் பரிதவிக்கும் ஆண்கள் அழகு நிலையம் செல்ல முடியாத கவலையில் பெண்கள்


ஊரடங்கு படுத்தும்பாடு: சலூன் கடைகள் திறக்கப்படாததால் பரிதவிக்கும் ஆண்கள் அழகு நிலையம் செல்ல முடியாத கவலையில் பெண்கள்
x
தினத்தந்தி 11 May 2020 5:35 AM IST (Updated: 11 May 2020 5:35 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு உத்தரவு காரணமாக சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்காததால் முடிவெட்ட முடியாமலும், ஷேவிங் செய்ய முடியாமலும் ஆண்கள் பரிதவித்து வருகின்றனர்.

திருவாரூர், 

ஊரடங்கு உத்தரவு காரணமாக சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்காததால் முடிவெட்ட முடியாமலும், ஷேவிங் செய்ய முடியாமலும் ஆண்கள் பரிதவித்து வருகின்றனர். அதே நேரத்தில் அழகு நிலையம் செல்ல முடியாமல் பெண்கள் கவலையடைந்துள்ளனர்.

சலூன் கடைகளுக்கு அனுமதி இல்லை

கொரோனா நோய் தாக்குதல் கட்டுப்படுத்த வருகிற 17-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நலன் கருதி ஊரடங்கில் தொடர்்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. பல தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வரும் நிலையில் பொதுமக்களின் முக்கிய தேவையான சலூன் கடைகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப் படாமல் உள்ளது.

சலூன் கடைகள் திறக்கப்படாததால் ஆண்கள் பாடு படு திண்டாட்டமாக இருந்து வருகிறது. பலரும் முடிவெட்ட முடியாமல் சடை முடியுடன் தவித்து வருகிறார்கள். சுயமாக ஷேவிங்(முகசவரம்) செய்து கொள்ளும் நிலையில், சிலர் இன்னும் அதற்கும் சலூன் கடைகளை மட்டுமே நம்பியுள்ளனர். சலூன் கடைகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடி கிடப்பதால் ஆண்கள் தலைநிறைய முடியுடனும், நீண்ட தாடியுடனும் அலைந்து வருகின்றனர். வெள்ளை முடிகளை மறைக்க அவ்வப்போது ‘டை’ அடித்துக்கொண்டு தங்களை இளைஞர்கள் போல் ஏமாற்றி வந்தவர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமாக உள்ளது.

சிகை அலங்கார நிபுணர்களாக

குறிப்பாக கோவில்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த வேண்டிக்கொண்டதுபோல் எல்லையற்ற முடி, தாடியுடன் பலர் சுற்றி வருகின்றனர். ஒரு சிலர், இணைதளங்களை பயன்படுத்தி சுயமாக முடி வெட்டி கொள்ளுதல், முக சவரம் என்பதில் களம் இறங்கி ரத்த காவுகளை கொடுத்து வருகின்றனர்.

சில வீட்டில் பெண்கள் களம் இறங்கி குழந்தைகளுக்கு முடிவெட்டி சிகை அலங்கார நிபுணர்களாக மாறி வருகின்றனர். அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதி்ல் வியர்வையில் நனைந்து வரும் நிலையில் தலையில் முடி அதிகமாக உள்ளவர்கள் சளி தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். கொரோனா நிலவி வரும் நிலையில் சளி தொந்தரவினால் தேவையற்ற மனக்கவலை அடைந்து வருகின்றனர். கோடை காலத்தில் போலீஸ்காரர்கள் போல் ‘சம்மர் கட்டிங்’ போட முடியாமல் தவித்து வருகின்றனர்.

பெண்கள் கவலை

ஆண்களின் திண்டாட்டம் ஒருபுறம் என்றால் பெண்களின் கவலையோ வேறு விதமாக உள்ளது. பெண்கள் அழகு நிலையம் செல்லும் பழக்கம் என்பது தற்போது நகரத்தை தாண்டி கிராமங்கள் வரை பரவியுள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான ஊர்களில் ஒரு அழகு நிலையம் இருப்பதை காண முடிகிறது.

ஆண்களுக்கு இணையாக தங்களது முடியை ஸ்டைலாக வெட்டி கொள்வதிலும், ‘டை’ அடிப்பதிலும் பெண்களும் அதிகம் ஆர்்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு விதமான அழகு சாதனங்களை பயன் படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

அவ்வப்போது அழகு நிலையத்திற்கு சென்று தங்கள் அழகுக்கு அழகூட்டி மெருகேற்றி புதுப்பொலிவுடன் திகழும் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்படாததால் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

எனவே இந்த விசயத்தை பொறுத்தவரையில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடுமையில் இருந்து விடுதலை பெற சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

பாதுகாப்பு உபகரணங்கள்

இதுகுறித்து தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தி்ன் திருவாரூர் மாவட்ட தலைவர் ராமன், செயலாளர் முருகானந்தம், நகர தலைவர் மதியழகன் ஆகியோர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்ட அளவில் 3 ஆயிரம் கடைகள் உள்ளன. இதனை சார்ந்து 10 ஆயிரம் தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கு மேலாக கடைகளை திறக்காமல் வேலையின்றி நாங்கள் வருமானம் இழந்து தவித்து வருகின்றோம். இதனால் பல குடும்பங்கள் வறுமையில் வாடுகிறது.

இந்்த நிலையில் ஊரடங்கி்ல் இருந்து பல தொழில்களுக்கு தளர்வு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால்் சலூன் கடைகளை திறக்க இன்னும் அனுமதி அளிக்கப்படாமல் உள்ளது. நாங்களும் அரசு விதிமுறைகளின் படி கொரோனா நோய் தொற்றினை தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை மேற்கொள்வோம். நோய் தொற்று ஏற்படாத வகையில் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவோம். எனவே எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட சலூன் கடைகளை உடனடியாக திறக்க அரசு அனுமதி அளி்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story