வாணியம்பாடி, ஆம்பூர் பகுதிகளில் தோல் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி - அமைச்சர் நிலோபர்கபில் கடிதம் வழங்கினார்
வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதிகளில் உள்ள தோல்தொழிற்சாலைகள் இயங்குவதற்கான அனுமதி கடிதத்தை அமைச்சர் நிலோபர் கபில் வழங்கினார்.
வாணியம்பாடி,
வாணியம்பாடியில் உள்ள உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபில் மற்றும் உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் தொழிற்சாலைகள் இயங்குவது மற்றும் தொழிலாளர்களுக்கு அளிக்கக்கூடிய பாதுகாப்பு குறித்து தோல் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் நிலோபர் கபில் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டிருக்கும் தோல் மற்றும் தோல் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் நலனை கருத்தில்கொண்டு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது 30 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்க ஆணை பிறபிக்கபட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் தமிழக அரசின் விதிமுறைப்படி தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி, விதிக்கப்பட்டுள்ள 43 விதிமுறைகளை பின்பற்றக்கூடிய தொழிற்சாலைகளுக்கு தொடர்ந்து இயங்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் வாணியம்பாடியில் 34, ஆம்பூர் பகுதியில் 160 தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மூடப்பட்டு தற்போது திறக்கப்படும் இத்தொழிற்சாலைகள், தொழிலாளர்களுக்கு வழங்கக்கூடிய நிலுவை தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும். மேலும் தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்படாமல் இருக்க ஏற்றுமதி நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு கையுறை, முககவசம், காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை நிர்வாகம் வழங்க வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு முறை கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினி அளிக்க வேண்டும்.
இதை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். 30 சதவீத தொழிலாளர்களைக் கொண்டு இயங்கக்கூடிய ஏற்றுமதி நிறுவனங்களுடன் தொடர்புடைய தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு அளிக்கப்பட்டு நடத்தி வந்தால் இன்னும் சில நாட்களில் 50 சதவீதமாக உயர்த்த வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து வாணியம்பாடியில் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கப்படவுள்ள தொழிற்சாலைக்களுக்கு மாவட்ட கலெக்டரால் அளிக்கப்பட்ட அனுமதி கடித நகல்களை சம்பந்தப்பட்ட தோல் தொழிற்சாலை நிர்வாகிகளிடம் அமைச்சர் நிலோபர்கபில் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முனீர், நகர அ.தி.மு.க. செயலாளர் சதாசிவம், அவைத்தலைவர் சுபான் மற்றும் வாணிடெக் நிர்வாக இயக்குநர் இக்பால்அமகது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story