திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி - கலெக்டர் சிவன்அருள் தகவல்
திருப்பத்தூர் மாவட்டத்தில் மதியம் 2 மணிவரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவன்அருள் தெரிவிதுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நோய் பாதிப்புக்குள்ளான கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை தவிர்த்து சில குறிப்பிட்ட வியாபார கடைகளுக்கு நேர கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. மேலும் தமிழக அரசு அறிவித்துள்ள புதிய தளர்வுகள் திருப்பத்தூர் மாவட்டத்தில் நேரக் கட்டுப்பாட்டுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.
அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். பிற கடைகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும்.
நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர மற்ற பகுதிகளில் டீ கடைகளில் பார்சல் சேவை மட்டும் முதல்கட்டமாக சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்து காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும். கிருமி நாசினியை தினமும் 5 முறை தெளித்து சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் நின்றோ, அமர்ந்தோ டீ குடிக்க அனுமதி இல்லை. இந்த முறையை கடைபிடிக்க தவறும் டீ கடைகள் உடனடியாக மூடப்படும்.
பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் 24 மணி நேரமும் செயல்படும். அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களும் 33 சதவீத பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். தமிழக அரசு அறிவுறுத்திய வழிமுறைகளை கடைபிடித்து பொதுமக்களும், தனியார் நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story