கூடலூர் அருகே, கிராமத்துக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்


கூடலூர் அருகே, கிராமத்துக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம்
x
தினத்தந்தி 11 May 2020 3:45 AM IST (Updated: 11 May 2020 7:17 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அருகே கிராமத்துக்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்தது.

கூடலூர், 

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட மேலம்பலம் கிராமத்துக்குள் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு காட்டுயானை ஒன்று புகுந்தது. தொடர்ந்து அங்குள்ள குடிசை வீடுகளை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. மேலும் குடிசைகளுக்குள் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வைத்திருந்த சாக்கு மூட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை வெளியே தூக்கி வீசியது. பின்னர் அத்தியாவசிய பொருட்களை தின்றது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். தொடர்ந்து கூச்சலிட்டு காட்டுயானையை விரட்டும் பணியில் மக்கள் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதற்கிடையில் தகவல் அறிந்து வந்த வன காப்பாளர் சிவக்குமார் தலைமையிலான வனத்துறையினர் மக்களுடன் இணைந்து காட்டுயானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதுகுறித்து மேலம்பலம் கிராம மக்கள் கூறியதாவது:-

எங்கள் கிராமத்துக்குள் அடிக்கடி காட்டுயானை வருகிறது. ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் வருமானமின்றி அவதிப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் காட்டுயானை கிராமத்துக்குள் புகுந்து குடிசைகளையும், அத்தியாவசிய பொருட்களையும் சேதப்படுத்தி உள்ளது. எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும். மேலும் காட்டுயானை கிராமத்துக்குள் வருவதை தடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story