ஊரடங்கால் விறகுகள் தட்டுப்பாடு: வனப்பகுதிக்குள் விழுந்து கிடக்கும் மரத்துண்டுகள் தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைப்பு
ஊரடங்கால் விறகுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, வனப்பகுதிக்குள் விழுந்து கிடக்கும் மரத்துண்டுகள் தேயிலை தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஊட்டி,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் மற்றும் தேயிலைத்தூள் உற்பத்தி முக்கிய பொருளாதாரமாக உள்ளது. ஊரடங்கால் தேயிலைத்தூள் உற்பத்தி நிறுத்தப்பட்டதோடு, விவசாயமும் பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் தேயிலை தொழிற்சாலைகள் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
அதனை தொடர்ந்து நீலகிரியில் 14 இன்கோசர்வ் தொழிற்சாலைகள், 6 டேன்டீ தொழிற்சாலைகள், 80 தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் குறைந்த தொழிலாளர்களை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு தடை இல்லை. இருப்பினும், தொழிற்சாலைகளில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் பச்சை தேயிலையை தேயிலைத்தூளாக உற்பத்தி செய்ய விறகுகள் அவசியம்.
ஊரடங்கு உத்தரவால் மேட்டுப்பாளையம், சேலம், நாமக்கல், சத்தியமங்கலம் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்து நீலகிரி தேயிலை தொழிற்சாலைகளுக்கு விறகுகள் மற்றும் கரும்பு சக்கைகளை லாரிகளில் கொண்டு வர முடியவில்லை. அதனால் சில தொழிற்சாலைகள் இயங்கவில்லை. மேலும் ஏற்கனவே இருப்பு வைத்திருந்த விறகுகளை கொண்டு உற்பத்தி நடந்து வந்தது. இதற்கிடையே தொடர்ந்து தேயிலைத்தூள் உற்பத்தி செய்ய தொழிற்சாலைகளுக்கு விறகுகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதற்கிடையில் வனத்துறைக்கு சொந்தமான நிலத்தில் கற்பூர, சீகை மரங்களை வெட்டி, அதற்கு பதிலாக சுற்றுச்சூழலை பாதுகாக்க சோலை மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன் பேரில் கோத்தகிரி அருகே ஈளாடா வனப்பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த சீகை மற்றும் கற்பூர மரங்கள் வெட்டப்பட்டன. இதனை வன ஒப்பந்ததாரர்கள் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கும், தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கும் தேயிலைத்தூள் உற்பத்தி செய்வதற்கு விறகுகளாக பயன்படுத்த வழங்கினர்.
வனப்பகுதியில் இருந்து லாரிகளில் மரத்துண்டுகள் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் வனப்பகுதிக்குள் விழுந்து கிடக்கும் மரத்துண்டுகளை சேகரித்து, டேன்டீ தொழிற்சாலைகளுக்கு கொடுத்து தேயிலைத்தூள் உற்பத்தி தொடர்ந்து நடைபெற வனத்துறை உதவி வருகிறது. எனினும் ஒரே நேரத்தில் பல ஏக்கர் பரப்பளவில் மரங்கள் வெட்டப்படுவதால், வனப்பகுதிகளை அதிகம் கொண்ட நீலகிரியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story