உக்கடம் மொத்த மார்க்கெட்டில், கட்டுப்பாட்டை மீறி மீன் வாங்க குவிந்த பொதுமக்கள் - போலீசார் லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைத்ததால் பரபரப்பு
கோவையில் உள்ள உக்கடம் மார்க்கெட்டில் கட்டுப்பாட்டை மீறி மீன் வாங்க பொதுமக்கள் குவிந்ததால் போலீசார் லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை,
கோவை உக்கடம் லாரிப்பேட்டை அருகே மொத்த மீன் மார்க்கெட் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மீன் மார்க்கெட் மூடப்பட்டு இருந்தது.
ஊரடங்கில் தளர்வு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 5-ந் தேதி முதல் இந்த மீன் மார்க்கெட்டை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அதாவது குறிப்பிட்ட நேரமான அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரைதான் திறக்க வேண்டும், வியாபாரிகளுக்கு மட்டுமே மீன் விற்க வேண்டும், எக்காரணத்தைக்கொண்டும் பொதுமக்களுக்கு மீன் விற்கக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தற்போது கடல் மீன் வரத்து அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வரத்து மார்க்கெட்டுக்கு அதிகமாக இருந்தது. இதனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் காலை 6 மணியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த மார்க்கெட்டில் மீன்வாங்க கூடினார்கள். பொதுமக்கள் அதிகமாக கூடினால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாது என்பதால் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துக்கொண்டே இருந்தனர்.
காலை 9 மணி கடந்தும் பொதுமக்கள் கூட்டம் குறையவில்லை. கூட்டம்அதிகரித்துக்கொண்டேதான் இருந்தது. இதன் காரணமாக நேரம் முடிந்த பின்பும் மார்க்கெட்டில் உள்ள கடைகளை மூட முடியவில்லை. இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், கடைகளை மூடும்படி கூறினார்கள்.
அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள், ஏன் மார்க்கெட்டை மூட சொல்கிறீர்கள், டாஸ்மாக் கடையை திறந்தபோது பாதுகாப்பு கொடுத்தீர்களே அதுபோன்று பாதுகாப்பு கொடுங்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் கட்டுப்பாட்டை மீறி அவர்கள் குவிந்தால், போலீசார் லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அந்த மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. அப்போது போலீசார் வியாபாரிகளிடம், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக்கூடாது என்றும், எக்காரணத்தைக்கொண்டும் பொதுமக்களுக்கு மீன் விற்கக்கூடாது என்று கூறியதுடன், தடையை மீறி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-
உக்கடம் மொத்த மீன் மார்க்கெட்டில் 54 மீன் கடைகளும், மீனை வெட்டிக்கொடுக்கும் கடைகள் 50-ம் உள்ளன. இங்கு பொதுமக்கள் அதிகமாக கூடினால் போதிய பாதுகாப்பு இருக்காது என்பதற்காகதான், பொதுமக்களுக்கு மீன் விற்கக்கூடாது என்றும், வியாபாரிகளுக்கு மட்டுமே விற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மார்க்கெட்டை திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் கடல் மீன் வரத்து அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துவிட்டனர். எனவே இந்த மார்க்கெட்டுக்கு பொதுமக்கள் வருவதை தவிர்த்துவிட்டு, சில்லரை மார்க்கெட்டுக்கு சென்று மீன் வாங்கி முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story