திண்டுக்கல் மாவட்டத்தில், கொரோனா பாதித்த 31 பகுதிகளுக்கு ‘சீல்’ - 17 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு


திண்டுக்கல் மாவட்டத்தில், கொரோனா பாதித்த 31 பகுதிகளுக்கு ‘சீல்’ - 17 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு
x
தினத்தந்தி 11 May 2020 1:14 PM IST (Updated: 11 May 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதித்த 31 பகுதிகள் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன. மேலும் 17 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரசால் நேற்று முன்தினம் வரை மொத்தம் 108 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் திண்டுக்கல் கிழக்கு தாலுகாவில் 39 பேரும், மேற்கு தாலுகாவில் 9 பேரும், ஒட்டன்சத்திரத்தில் 11 பேரும், பழனியில் 9 பேரும், வேடசந்தூரில் 2 பேரும், நத்தத்தில் 11 பேரும், நிலக்கோட்டையில் 21 பேரும், ஆத்தூரில் 5 பேரும், கொடைக்கானலில் ஒருவரும் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர்களுக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதில் பெண்கள், முதியவர்கள் உள்பட 79 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். திண்டுக்கல்லை சேர்ந்த ஒரு முதியவர் மட்டும் இறந்து விட்டார். மேலும் 28 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து கொரோனா பாதித்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 48 இடங்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி ‘சீல்’ வைத்தனர். அதில் 28 நாட்கள் நிறைவடைந்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. மேலும் அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் வெளியே சென்று வரும் வகையில் ‘சீல்’ வைக்கப்பட்ட பகுதிகள் திறக்கப்பட்டன. அதன்படி மாவட்டம் முழுவதும் இதுவரை 17 இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, அவ்விடங்களில் தடுப்புகள் அகற்றப்பட்டன. அதேநேரம் 31 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Next Story