லாரிகள் ஓடாததால் ஈரோட்டில் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு


லாரிகள் ஓடாததால் ஈரோட்டில் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிப்பு
x
தினத்தந்தி 11 May 2020 11:00 PM GMT (Updated: 11 May 2020 8:03 PM GMT)

லாரிகள் ஓடாததால் ஈரோட்டில் ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு, 

ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஜவுளிகள், மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக ஈரோடு பகுதிகளில் 74 லாரி புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறன. ஈரோட்டில் புக்கிங் செய்யப்படும் பொருட்கள் லாரிகள் மூலம் கர்நாடகா, டெல்லி, ஆந்திரா, கேரளா, பஞ்சாப், ஒடிசா, மராட்டியம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் மதிப்பு கூட்டப்பட்ட ஜவுளி, அதனை சார்ந்த ஆயத்த ஆடைகள் ஆகியவற்றுக்கு தேவையான மூலப்பொருட்களும் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஈரோட்டில் உள்ள புக்கிங் அலுவலகங்களுக்கு கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி முதல் வருகிற 17-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 50 நாட்களாக லாரிகள் ஓடாததால் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு லாரி புக்கிங் ஏஜெண்ட் அசோசியேசன் துணைச்செயலாளர் கே.குமார் கூறியதாவது:-

ஈரோடு மற்றும் ஈரோடு வழியாக பல்வேறு மாநிலங்களுக்கு தினசரி மஞ்சள், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலமாக அனுப்பப்படுகிறது. மேலும் இதனை சார்ந்த மூலப்பொருட்களும் ஈரோட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. அதன்படி 7 ஆயிரம் லாரிகள் இயக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு ரூ.100 கோடி மதிப்பிலான மஞ்சள், ஜவுளி, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கடந்த 50 நாட்களாக தொடர்ந்து லாரிகள் ஓடாததால் சுமார் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜவுளி, எண்ணெய் உற்பத்தி, விற்பனை முடங்கி கிடப்பதாலும், டிரைவர்கள் கிடைக்காததாலும், வெளி மாநிலங்களுக்கு சென்ற லாரிகள் அங்கேயே நிறுத்தப்பட்டு உள்ளதாலும் தொடர்ந்து லாரிகளை இயக்க முடிவதில்லை. இதன் காரணமாக பல்வேறு தரப்பினர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே எங்களுக்கு நிவாரண உதவி கிடைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.


Next Story