இயல்புநிலைக்கு திரும்பிய திருப்பூர்: பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன
பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியது.
திருப்பூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிற 17-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் வீட்டிலேயே முடங்கிக்கிடந்தனர். அதன்பிறகு காய்கறி, மளிகை கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. கடந்த 6-ந்தேதி முதல் சில தனிக்கடைகள் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் பெரும்பாலான கடைகளை திறக்க தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்டத்தில் நேற்று காலை முதல் பெரும்பாலான கடைகள் திறந்து செயல்பட்டன. டீக்கடைகள், பேக்கரிகள், உணவகங்கள் நேற்று திறக்கப்பட்டன. பார்சல் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.ஆனால் பெரும்பாலான இடங்களில் டீக்கடை, பேக்கரிகள் வழக்கமான நடைமுறையில் நடந்தன. டீக்கடைகளில் வடை, பஜ்ஜி, போண்டோ விற்பனை செய்யப்பட்டால் கூட்டம்அதிகமாகவே இருந்தது. மாவட்டத்தின் புற நகர பகுதிகளில் டீக்கடை, பேக்கரிகளில் பார்சல் மட்டுமில்லாமல் வழக்கம்போல் செயல்பட்டன. அந்த கடைகளை பார்க்கும்போது மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது தெரியவந்தது.
பூ, பழம், காய்கறி, பலசரக்கு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், மின்சாதன பொருட்கள், செல்போன் கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பழுது பார்க்கும் கடைகள், குறிப்பாக இதுவரை அனுமதிக்கப்படாமல் இருந்த சிறிய நகைக்கடைகள், சிறிய ஜவுளிக்கடைகள் நேற்று ஊரக பகுதிகளில் திறக்கப்பட்டன. குளிர்சாதன வசதியில்லாத கடைகளாக அவை இருந்தன. சாலையோர தள்ளுவண்டி கடைகள் நேற்று இடம்பெற்றன. கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ், லாரி புக்கிங் சர்வீஸ் செயல்பட்டன.
குறிப்பாக இரண்டு சக்கரமற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள், பழுது நீக்கும் கடைகள் செயல்பட்டது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது பார்க்கும் கடைகளில் நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது.
மரக்கடைகள்,மரம் அறுக்கும் கடைகள் செயல்பட்டன. இதனால் கட்டுமான பணிகள் மீண்டும் தொடங்கி நடைபெற்றன. சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டு செயல்பட்டதால் திருப்பூர் மாவட்டம் இயல்பு நிலைக்கு திரும்பியதை காண முடிந்தது. சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்பட்டன. போக்குவரத்து காவலர்கள் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். இந்த செயல்பாடு முடங்கி கிடந்த பின்னலாடை நகர மக்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. பின்னலாடை சார்ந்த நிறுவனங்களும் செயல்படுவதால் விரைவில் மந்த நிலை சீரடைந்து தொழில் நிலைமை சீராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொழிலாளர்களுக்கு புது நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.
Related Tags :
Next Story