குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்


குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்
x
தினத்தந்தி 11 May 2020 11:45 PM GMT (Updated: 11 May 2020 8:58 PM GMT)

இன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள், குடும்பத்தை மறந்து நோயாளிகளை தங்கள் பிள்ளைகளாக கருதி செவிலியர்கள் சேவை செய்து வருகிறார்கள். சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி செவிலியர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

வேலூர், 

ஆரணி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் கண்காணிப்பாளர் டி.டார்த்தி, உலக செவிலியர் தினம் குறித்து அனைத்து செவிலியர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

நான் கடந்த 26 ஆண்டு காலமாக செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். எனது பணிக்காலத்தில் மகப்பேறின்போது சுகப்பிரசவங்களை பார்த்துள்ளேன். கடந்த காலங்களில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய் காலங்களிலும் கூட தீவிரமாக பணிபுரிந்துள்ளோம். தற்போது உலக மக்களையே அச்சுறுத்தி வரும், கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரசால் ஏராளமானோர் உயிர் இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை உலக நாடுகளில் உள்ள அனைத்து செவிலியர்களுமே தமது குடும்பத்தை மறந்து நாட்டுக்காக இந்த கொரோனா காலத்தில் பணிபுரிந்துள்ளார்கள்.

பணி முடிந்தும் நேரிடையாக வீட்டிற்கும் செல்லாமல் குழந்தைகளையும் குடும்பத்தையும் பார்க்க முடியாத சூழ்நிலையில் பணிபுரிந்து வருகிறார்கள். இதற்கு உலக நாடுகளே செவிலியர்களின் பணி உன்னதமானது என பாராட்டி வருவதை மனதார வரவேற்கிறேன்.

ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரி செவிலியர் பா.கீதா:-

இப்போது உள்ள காலத்தில் அனைவரும் சுகாதார விழிப்புணர்வுக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். கொரோனோ போன்ற தொற்று நோய்கள் சமூகப்பரவலாக மாறாமல் இருக்க அரசின் நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். செவிலியர்களாகிய நாங்கள் மக்களுக்காகப் பணியாற்றிட எப்போதும் தயாராக இருக்கிறோம். நோயற்ற தமிழகத்தை உருவாக்க உழைப்போம். அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

திருப்பத்தூரை சேர்ந்த செவிலியர் ஏ.சுபாஷினி:-

நான் கடந்த 25 ஆண்டு களாக செவிலியராக (நர்சாக)பணி புரிந்து வருகிறேன். கர்ப்பிணிகளுக்கு பிரசவநேரத்தில் அவர்களது குழந்தையை ஒப்படைம்போது ஏற்படும் மகிழ்ச்சியை அனுபவிப்பது மறக்க முடியாததாக இருக்கும். பல சமயங்களில் பெண்கள் பிரசவ வலி தெரியாமல் நேரம் முடிந்து வரும்போது குழந்தையின் உயிரை காப்பாற்றும்போது இந்த பணியில் மகத்துவம் தெரியும். மேலும் கொரோனா சமயத்தில் செவிலியர்களை எங்களது பணியை பொதுமக்கள் உட்பட அனைவரும் பாராட்டியது மேலும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. அனைத்து செவிலியர்களுக்கும் இந்த செவிலியர் தினத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

திருவண்ணாமலையை அடுத்த ஆடையூரை சேர்ந்த செவிலிர் நந்தினி கூறியதாவது:-

நான் திருவண்ணாமலை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறேன். செவிலியராக பணி புரிவதில் நான் பெருமைப்படுகிறேன். நான் மட்டுமின்றி அனைத்து செவிலியர்களும் இப்பணியில் மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம். ஒப்பந்த அடிப்படையில் குறைந்த சம்பளத்தில் நாங்கள் பணியாற்றி வருகின்றோம். இந்த கொரோனா வைரஸ் பணியில் நாங்கள் முழு மனதோடு பணியாற்றி வருகின்றோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் நாங்கள் அரசுடன் இணைந்து சிறப்பாக சேவை செய்து வருகின்றோம். கடந்த ஆண்டு செவிலியர் தினத்தை நாங்கள் மருத்துவமனையில் கொண்டாடினோம். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் செவிலியர் தினத்தன்று சேவை செய்வது மிகவும் பெருமையாக உள்ளது.

Next Story