நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு ரெயிலில் அனுப்பி வைக்க ஏற்பாடு


நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு ரெயிலில் அனுப்பி வைக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 11 May 2020 10:30 PM GMT (Updated: 11 May 2020 9:08 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு ரெயிலில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வள்ளியூர், 

நெல்லை மாவட்டத்தில் பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் நெல்லை பகுதியில் தங்கியிருந்து வியாபாரம், கூலி வேலை செய்து வருகிறார்கள்.

இதுதவிர கூடங்குளம் அணுமின் நிலையத்திலும் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கொரோனா ஊரடங்கால் சிரமப்படும் இந்த தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி வந்தனர். நெல்லை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த வாரம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கூடங்குளம் அணுமின்நிலைய கட்டுமான பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து வடமாநில தொழிலாளர்களை உடனடியாக ரெயில் மூலம் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு கூடங்குளம் தொழிலாளர்கள் 1,200 பேரை முதற்கட்டமாக ஒரு ரெயிலில் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து தொழிலாளர்கள் அனைவரும் சிறப்பு ரெயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதையொட்டி நெல்லை டவுன் போலீஸ் உதவி கமிஷனர் சதீஷ்குமார் தலைமையில் போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தை நேற்று ஆய்வு செய்தனர். அங்கு ரெயிலில் பயணம் செய்ய வருவோர் மட்டும் உள்ளே செல்லும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் வரிசையில் சமூக இடைவெளி விட்டு நிற்கும் வகையில் பெயிண்டு மூலம் கோடு வரையப்பட்டது.

இதுகுறித்து இன்பதுரை எம்.எல்.ஏ. கூறுகையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் வடமாநில ஒப்பந்த தொழிலாளர்களை முதல் கட்டமாக 1,200 பேரை சிறப்பு ரெயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்த தமிழக முதல்-அமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.


Next Story