அரசு அனுமதித்தும் திறக்கப்படாத டீ கடைகள் “பார்சல் மட்டுமே வழங்குவது சாத்தியமில்லை என்கிறார்கள் ”
அரசு அனுமதி வழங்கியும் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு டீ கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. ‘பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவித்து இருப்பது சாத்தியமில்லை’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர்,
அரசு அனுமதி வழங்கியும் தஞ்சை மாநகரில் உள்ள பல்வேறு டீ கடைகள் நேற்று திறக்கப்படவில்லை. ‘பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவித்து இருப்பது சாத்தியமில்லை’ என்று அவர்கள் தெரிவித்தனர்.
டீ கடைகளுக்கு அனுமதி
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளது. இந்த நிலையில் அரசு 34 வகையான கடைகளை திறக்க நேற்று முன்தினம் அனுமதி அளித்துள்ளது. அதில் ஒன்று டீ கடைகள்.
அதுவும் டீ கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அங்கு அமர்ந்து குடிக்கும் வகையில் யாருக்கும் வழங்கக்கூடாது. பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திறக்கப்படவில்லை
அரசின் இந்த அறிவிப்பு கிராமப்பகுதிகளில் உள்ள டீ கடைகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஆனால் நகர பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இது சாத்தியம் இல்லை என்று தெரிவிக்கிறார்கள் டீ கடை உரிமையாளர்கள். இதனையடுத்து தஞ்சை மாநகரில் உள்ள பல டீ கடைகள் நேற்று திறக்கப்படவில்லை.
ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 47 நாட்களுக்கு பிறகு அறிவிப்பு விடுத்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டது எங்களது நிலைமை என்று கூறிய டீக்கடைக்காரர்கள் தஞ்சை கொடிமரத்து மூலை, கீழராஜவீதி, பழைய பஸ் நிலையம், காந்திஜி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டீக்கடைகளை திறக்கவில்லை.
பார்சல் மட்டுமே சாத்தியமில்லை
இது குறித்து டீக்கடை நடத்தி வருபவர்கள் கூறுகையில், “பெரும்பாலும் சாலையோர டீ கடைகளில் டீ குடிக்க வருபவர்கள் அந்த வழியாக செல்பவர்கள் தான். அவர்கள் பார்சல் வாங்கிக்கொண்டு என்ன செய்வார்கள். டீ கடைகளுக்கு டீ குடிக்க வருபவர்கள் அங்கேயே தான் டீ குடிப்பார்கள்.
அப்படி இருக்கையில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவித்து இருப்பது சாத்தியமில்லை, டீ கடைகளில் டீ குடிக்கலாம் என கூறுவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடலாம்” என்றனர்.
Related Tags :
Next Story