நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் 47 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கடைகள் மீண்டும் அடைப்பு பொதுமக்கள் ஏமாற்றம்
கும்பகோணத்தில், 47 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கடைகள், நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் மீண்டும் அடைக்கப்பட்டன.
கும்பகோணம்,
கும்பகோணத்தில், 47 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கடைகள், நகராட்சி அதிகாரிகள் உத்தரவின் பேரில் மீண்டும் அடைக்கப்பட்டன. இதனால் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கடைகள் திறப்பு
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கும்பகோணத்தில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கு நேரத்தில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. நேற்று முன்தினம், 34 விதமான வியாபார நிறுவனங்கள், அரசின் விதிமுறைகளை கடைபிடித்து நடத்தி கொள்ளலாம் என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து கும்பகோணத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் 48-வது நாளான நேற்று காலை திறக்கப்பட்டது. இந்த தகவல் அறிந்து கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கும்பகோணம் வந்து அங்கு திறந்து இருந்த கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர்.
கடைகளை அடைக்க உத்தரவு
இந்த நிலையில் கும்பகோணம் நகராட்சி அதிகாரிகள் பலர், நகரில் திறந்திருந்த கடைகளை அடைக்க சொல்லி உத்தரவிட்டனர். அவர்களிடம் வியாபாரிகள் அரசின் உத்தரவின்படியே கடைகளை திறந்துள்ளோம். அதனால் நாங்கள் கடைகளை அடைக்க முடியாது என கூறினர். இதனால் குழப்பமான நகராட்சி அதிகாரிகள் போலீசாரின் உதவியை நாடினர்.
இதையடுத்து நகரின் முக்கிய பகுதிக்கு வந்த போலீசார், உடனடியாக கடைகளை மூடச்சொல்லி உத்தரவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த வியாபாரிகள் அனைத்து வணிக சங்க நிர்வாகிகளுடன் கும்பகோணம் நகராட்சி ஆணையர் லெட்சுமியை சந்தித்து தங்களது நிலையை விளக்கி கடைகளை திறந்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என கோரினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆணையர் லட்சுமி வியாபாரிகளின் கோரிக்கையை நிராகரித்தார்.
கடைகள் அடைப்பு
கும்பகோணம் நகராட்சி பகுதி முழுவதும் கொரோனா தொற்று நகரமாக உள்ளது. இதனால்தான் மற்ற இடங்களில் 7-ந் தேதி டாஸ்மாக் திறந்தபோதும் கூட இங்கு திறக்க அனுமதிக்கவில்லை. அதேபோல மற்ற நகரங்களில் ஊரடங்கு தளர்வு இருந்தாலும் இந்த நகரத்தில் தளர்வு அளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
எனவே வருகிற 17-ந் தேதி வரை வழக்கமான கட்டுப்பாடுகளுடன் முந்தைய ஊரடங்கு நிலையே தொடரும். அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் தவிர மற்ற எந்தவொரு கடையும் திறக்க அனுமதியில்லை என கூறினார். இதனால் கும்பகோணத்தில் உள்ள வியாபாரிகள், மதியம் 2 மணி அளவில் திறந்திருந்த அனைத்து கடைகளையும் அடைத்தனர்.
பொதுமக்கள் ஏமாற்றம்
இதனால் நீண்ட நாட்களுக்கு பிறகு கடைகளில் பொருட்களை வாங்க வந்த பொதுமக்களும், கடைகளில் வேலைக்கு வந்த ஊழியர்களும் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
Related Tags :
Next Story