திருத்துறைப்பூண்டியில் துப்புரவு ஆய்வாளருக்கு கத்திக்குத்து; பா.ம.க. பிரமுகர் கைது நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப்பூண்டியில் துப்புரவு ஆய்வாளரை கத்தியால் குத்திய பா.ம.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில் துப்புரவு ஆய்வாளரை கத்தியால் குத்திய பா.ம.க. பிரமுகரை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மீன் வியாபாரம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ராமர் மட தெருவை சேர்ந்தவர் கல்விபிரியன் நீதிராஜா(வயது40). இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீன் வியாபாரமும் செய்து வருகிறார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று திருத்துறைப்பூண்டி பழைய பஸ் நிலையம் அருகில் கல்விபிரியன் நீதிராஜா மீன் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நகராட்சி ஆணையர் சந்திரசேகர், இந்த பகுதியில் மீன் விற்பனை செய்யக்கூடாது எனவும், அங்கீகரிக்கப்பட்ட மீன் மார்க்கெட் பகுதியில் தான் விற்பனை செய்ய வேண்டும் எனவும் கூறி மீன்கடையை அகற்ற உத்தரவிட்டார். இதை தொடர்ந்து மீன்கடை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.
கத்திக்குத்து
தனது மீன் கடை அகற்றப்பட்டதற்கு ஆஸ்பத்திரி தெருவில் வசித்து வரும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் வெங்கடாசலம் தான் காரணம் என நினைத்த கல்விபிரியன் நீதிராஜா அவரை தேடி அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வெங்கடாசலத்தை வழிமறித்து கல்விபிரியன் நீதிராஜா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரை குத்தினார்.
இதில் காயம் அடைந்த வெங்கடாசலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்ப்பாட்டம்
துப்புரவு ஆய்வாளர் கத்தியால் குத்தப்பட்டதை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்விபிரியன் நீதிராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து நகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் மன்னார்குடி நகராட்சி எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் ராஜகோவிந்தன் தலைமை தாங்கினார். இதில் மாநில துணை தலைவர் சிவசுப்பிரமணியம், கிளை துணைத்தலைவர் விஜயகுமார், கிளை தலைவர் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story