ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: நாகையில் பெரும்பாலான கடைகள் திறப்பு டீ கடையில் குவிந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை


ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு: நாகையில் பெரும்பாலான கடைகள் திறப்பு டீ கடையில் குவிந்தவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 May 2020 6:02 AM IST (Updated: 12 May 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நாகையில், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

நாகப்பட்டினம், 

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நாகையில், பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. டீ கடைகளில் கூட்டமாக நின்று டீ குடித்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

ஊரடங்கில் தளர்வு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே திறந்திருந்தன. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடந்ததால், வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தொழிற்சாலைகள், கட்டுமான பணி உள்ளிட்ட சிலவற்றிக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. டீ கடை உள்ளிட்ட 34 வகையான கடைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் 33 சதவித ஊழியர்களுடன் இயங்கலாம் என அறிவிக்கப்பட்டது.

பெரும்பாலான கடைகள் திறப்பு

இதனையடுத்து நேற்று நாகை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

காலை முதலே டீ கடைகளில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து டீ குடித்து சென்றனர். சில இடங்களில் உள்ள டீ கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் டீ குடித்து கொண்டிருந்தவர்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் கடைகளில் கூட்டம் போட்டால் சீல் வைத்து விடுவதாகவும் டீ கடை உரிமையாளர்களிடம் போலீசார் எச்சரித்து சென்றனர்.

இதேபோல செல்போன் சர்வீஸ் சென்டர்கள், ஜெராக்ஸ் கடைகள், ஜூஸ் கடைகள், சாலையோர தள்ளுவண்டிக்கடைகள் என அனைத்து கடைகளும் திறந்திருந்தன. இதனால் நாகையில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

Next Story