47 நாட்களுக்கு பிறகு அனுமதி: குமரியில் கிராமம் முதல் நகரம் வரை பரபரப்புடன் இயங்கிய கடைகள்


47 நாட்களுக்கு பிறகு அனுமதி: குமரியில் கிராமம் முதல் நகரம் வரை பரபரப்புடன் இயங்கிய கடைகள்
x
தினத்தந்தி 12 May 2020 7:12 AM IST (Updated: 12 May 2020 7:12 AM IST)
t-max-icont-min-icon

47 நாட்களுக்கு பிறகு குமரியில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் நேற்று கடைகள் திறக்கப்பட்டன.

நாகர்கோவில், 

47 நாட்களுக்கு பிறகு குமரியில் கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் நேற்று கடைகள் திறக்கப்பட்டன. இதனால் ஊரடங்குக்கு முந்தைய நிலை திரும்பியதை போன்ற உணர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

தமிழக அரசு அனுமதி

கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3-வது கட்டமாக 17-ந் தேதி வரை இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் கள் கிடைக்காமல் போய் விடக்கூடாது என்பதற்காக மளிகை கடைகள், காய்கறி கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்பட்டன. இதேபோல் பால் கடைகள், ஓட்டல்கள் (பார்சல்கள் மட்டும்) போன்றவை குறிப்பிட்ட நேரங்களில் திறக்க அனுமதிக்கப்பட்டன. மருந்து கடைகள் நாள் முழுவதும் திறந்து வைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் 45 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் சிறு, சிறு தொழிற்சாலைகள், தனிக்கடைகள் ஆகியவை திறக்க அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில் மேலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு 34 வகையான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்தது. இந்த தளர்விலும், மால்கள், வணிக வளாகங்கள், அவற்றில் செயல்படும் கடைகள், முடி திருத்தகம், அழகு நிலையங்கள்,

குளிர்சாதன வசதி செய்யப்பட்ட நகைக்கடைகள், துணிக்கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பல்பொருள் அங்காடிகள், பீடா கடைகள் ஆகியவை செயல்பட அனுமதியில்லை.

டீக்கடைகள் திறப்பு

காய்கறிகள், மளிகை பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரையும், இதர தனிக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

தளர்வில், டீக் கடைகள் (பார்சல் மட்டும்), கண் கண்ணாடி விற்பனையகங்கள், கண் கண்ணாடி பழுது பார்க்கும் கடைகள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய நகைக்கடைகள் போன்றவை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி குமரி மாவட்டத்தில் நேற்று டீக்கடைகள் காலை 10 மணிக்கு பிறகு திறக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், காலை 6 மணியில் இருந்தே இந்த கடைகள் செயல்பட தொடங்கியது. கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் டீக்கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் பார்சல் டீ மட்டுமே வழங்கப்பட்டன.

47 நாட்களுக்கு பிறகு...

குமரியில் பட்டி தொட்டி முதல் நகரம் வரை டீக்கடைகள் அதிகம். இன்னும் சொல்லப்போனால், தெருக்கள்தோறும் டீக்கடைகள் இருக்கும். கொரோனா ஊரடங்கால் டீக்கடைகள் அடைக்கப்பட்டன. டீக்கடைகள் திறந்தால், கொரோனா ஊரடங்கு தோல்வியில் முடியும் என்பது அரசின் கருத்தாக இருந்தது.

இதனால் ஊரடங்கின் முதல் தளர்விலும் டீக்கடைகளை திறக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் 47 நாட்களுக்கு பிறகு டீக்கடைகள் நேற்று செயல்பட்டதால் கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய நிலை திரும்பியதை போன்று உணர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதே சமயத்தில் குளச்சலில் டீக்கடைகள் திறக்கப்படவில்லை. ஒரு சில டீக்கடைகள் மட்டுமே செயல்பட்டன. பார்சல் மட்டும் கொடுப்பதால் டீ விற்பனை சரியாக நடைபெறாது என்று டீக்கடைக்காரர்கள் குற்றம்சாட்டினர். டீக்கடைகள், பெட்டிக்கடைகள், நகைக்கடைகள், சிறிய துணிக்கடைகள், இருசக்கர, நான்கு சக்கர வாகன விற்பனை கடைகள், பாத்திரக்கடைகள் போன்றவை நேற்று திறக்கப்பட்டதால் நாகர்கோவில் நகரின் அனைத்து பகுதிகளிலும் வாகன போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருந்தது.

முந்தைய நிலை

இதனால் நாகர்கோவில் கேப்ரோடு. கே.பி.ரோடு, இந்துக்கல்லூரி ரோடு, ஈத்தாமொழி ரோடு, ராஜாக்கமங்கலம் ரோடு, கன்னியாகுமரி ரோடு, பாலமோர் ரோடு, பி.டபிள்யூ.டி. ரோடு,

வெட்டூர்ணிமடம் ரோடு, வடசேரி ரோடு, அசம்பு ரோடு, கம்பளம் ரோடு, மீனாட்சிபுரம் என நகரின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் நேற்று காலை முதல் இரவு வரை இருந்தது.

சில சாலைகளில் காலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி இருந்தது.

இதனால் நாகர்கோவில் நகரில் கொரோனா ஊரடங்குக்கு முந்தைய இயல்பு நிலை திரும்பியதை காண முடிந்தது.

Next Story