கொரோனாவுக்கு மத்தியில் பணிசெய்யும் தூய்மை பணியாளர்களுக்கு கறிவிருந்து பரிமாறிய பொதுமக்கள்
கொரோனாவுக்கு மத்தியில் பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்களே கறிவிருந்து பரிமாறிய நெகிழ்ச்சி சம்பவம் கோவையில் அரங்கேறி உள்ளது.
கோவை,
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடே நடுங்கி ஊரடங்கி இருக்கும்போதும், நாடு முழுவதும் தூய்மை பணியாளர்கள், கொரோனா வைரசை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தூய்மை பணியாளர்களுக்கு தற்போது பணிசுமை அதிகரித்துள்ளது. நேரங் காலம் பார்க்காமல் தூய்மைப்பணிகள், கிருமிநாசினி, பிளச்சிங் பவுடர் தெளிப்பது போன்ற பணிகளில் ஓய்வின்றி தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் வீடுகளில் தேங்கும் குப்பைகள், கழிவுகளை தினமும் அப்புறப்படுத்துவதால், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தையும் மறந்து ஓய்வின்றி பணியாற்றி வருகிறார்கள். கொரோனாவுக்கு மத்தியில் சிறப்பாக பணியாற்றும் இவர்களின் இந்த பணிகளை பாராட்டி பல்வேறு பகுதிகளில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவை அருகே நூதன முறையில் கறிவிருந்து பரிமாறி தூய்மை பணியாளர்களுக்கு பொதுமக்கள் சிறப்பான மரியாதை செய்து உள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான சம்பவம் வருமாறு:-
கோவை பீளமேடு அருகே தண்ணீர் பந்தல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் உள்ளனர். கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை பாராட்டி கறிவிருந்து வழங்க அந்த பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி தூய்மை பணியாளர்களை போற்றும் விதமாக தண்ணீர் பந்தல் பகுதியில் பணியாற்றும் 60 தூய்மை பணியாளர்களுக்கு நேற்று மதியம் கறி விருந்து பறிமாறப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் அப்பகுதி பொதுமக்கள் மரியாதை செய்தனர். தூய்மை பணியாளர்களின் சேவையை பாராட்டும் விதமாகவும், அவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு மதியம் கறிவிருந்து பரிமாறி மரியாதை செய்ததாக அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதேபோல் கோவை அருகே போத்தனூர் பகுதியில் கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக சிறப்பாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை பாராட்டி அவர்களுக்கு பொதுமக்கள் முகக்கவசம் வழங்கினர். பின்னர் அவர்களின் சேவையை பாராட்டி சேலைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் மீது மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு போத்தனூர் பகுதி சுகாதார உதவி ஆய்வாளர் சரவணன் தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர்கள் கமல்நாத், அஜித்குமார் உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
Related Tags :
Next Story