புதுவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 150 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை


புதுவையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 150 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 12 May 2020 7:57 AM IST (Updated: 12 May 2020 7:57 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றிய 150 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரி,

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் புதுவை மாநிலத்திலும் கால் பதித்துள்ளது. இதன் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. அங்கு போலீசார், மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிவரும் வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்கு வரும் வாகனங்கள், அவசர தேவைக்காக வருபவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்து வருகிறார்கள். மருத்துவ பரிசோதனை மற்றும் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் பாதிப்பு

இந்தநிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது தற்போது தெரியவந்துள்ளதையடுத்து அவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. அதேபோல் புதுவை மாநிலத்திலும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு மருத்துவ பரிசோதனை செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

அதன்பேரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட அரியாங்குப்பம் சொர்ணாநகர், திருக்கனூர், திருபுவனை, மூலக்குளம் ஆகிய பகுதிகளில் பணியாற்றிய போலீசார், எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான பரிசோதனை முகாம் கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.

150 பேருக்கு பரிசோதனை

சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் பரிசோதனை முகாமை தொடங்கி வைத்தார். இதில் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த முகாமில் சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் கவச உடை அணிந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

நேற்று ஒரே நாளில் சுமார் 150 போலீசாருக்கு உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் விரைவில் தெரியவரும் என்று மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story