என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: பலியான ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை


என்.எல்.சி.யில் கொதிகலன் வெடித்து விபத்து: பலியான ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
x
தினத்தந்தி 12 May 2020 2:50 AM GMT (Updated: 12 May 2020 2:50 AM GMT)

என்.எல்.சி.யில் கொதி கலன் வெடித்த விபத்தில் பலியான ஒப்பந்த தொழிலாளியின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.

நெய்வேலி,

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள அனல்மின் நிலையங்களில் ஒன்றான, இரண்டாம் அனல் மின் நிலையத்தில், உள்ள 6-வது உற்பத்தி பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ந்தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன்(வயது 54), ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகியோர் தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதில் நெய்வேலி 29-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த சர்புதீன் கடந்த 8-ந்தேதியும், கொல்லிருப்பை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம்(26) நேற்று முன்தினமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற 6 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பேச்சுவார்த்தை

இதற்கிடையே இறந்த சண்முகத்தின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.1 கோடி, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவரது உறவினர்கள், கிராம மக்கள், பா.ம.க.வினர் என்.எல்.சி.2-ம் அனல்மின் நிலையம் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கோரிக்கைகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு., தொ.மு.ச., பா.ம.க., பாட்டாளி தொழிற்சங்கத்தினர் என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இழப்பீடாக ரூ.15 லட்சம் தருவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினர் ஒத்துக்கொள்ளவில்லை.

சுமூக முடிவு

இந்த நிலையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சி.ஐ.டி.யு. தொமு.ச. நிர்வாகிகள், பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள், பா.ம.க. மாவட்ட, மாநில நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் சுமூக தீர்வு எட்டப்பட்டது. அதாவது இறந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகத்தின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சமும், நிபந்தனை ஏதுமின்றி குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்குவதாக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தொழிற்சங்கத்தினரும், குடும்பத்தினரும் ஒப்புக்கொண்டனர்.

Next Story