திருச்சி என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் பகுதியில் ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி மறுப்பு


திருச்சி என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் பகுதியில் ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 12 May 2020 8:38 AM IST (Updated: 12 May 2020 8:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் பகுதியில் ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

திருச்சி, 

திருச்சி என்.எஸ்.பி.ரோடு, தெப்பக்குளம் பகுதியில் ஊரடங்கால் மூடப்பட்ட தரைக்கடைகளை திறப்பதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர்.

சாலையோர வியாபாரம்

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் சாலையோர வியாபாரம் முடங்கிபோனது. திருச்சி மாநகரை பொறுத்தவரை சாலையோர வியாபாரிகள் அதிகமாக தொழில் நடத்தியது சத்திரம் பஸ் நிலையம் மற்றும் அதையொட்டி உள்ள பகுதிகளில்தான். இந்த நிலையில் தரைக்கடை வியாபாரிகளுக்கு நேற்று முதல் ஊரடங்கில் தளர்வு கொடுக்கப்பட்டு அவர்கள் மீண்டும் வியாபாரம் செய்திட அனுமதி அளிக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் பிரதானதாக தரைக்கடைகள் அமைந்துள்ள இடமாக என்.எஸ்.பி. சாலை மற்றும் தெப்பக்குளம் பகுதியை சுற்றி இருப்பவை ஆகும். இந்த பகுதியில் உள்ள தரைக்கடைகளை தவிர, ஏனைய பகுதிகளில் உள்ள தரைக்கடைகள் நேற்று முதல் வழக்கம்போல செயல்பட தொடங்கியது.

அனுமதி மறுப்பு

ஆனால் என்.எஸ்.பி. சாலையில் உள்ள சாலையோர தரைக்கடைகளை திறக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், வியாபாரிகள் பெரும் வேதனைக்குள்ளாகி இருக்கிறார்கள். 45 நாட்கள் கழித்து ஆவலுடன் கடைகளை திறக்க வந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கினர். பின்னர் கோட்டை பகுதியில் உள்ள திருச்சி கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மோகன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோரை தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பினர் சந்தித்து முறையிட்டனர். ஆனாலும் மாலைவரை எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.

இது தொடர்பாக மனிதநேய வர்த்தக நலச்சங்க பொதுச்செயலாளர் அஷ்ரப் அலி கூறும் போது, என்.எஸ்.பி.சாலை, தெப்பக்குளம் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் உள்ளன. 45 நாட்களாக வருவாய் இன்றி தவித்து வருகிறோம். தரைக்கடைகள் வியாபாரத்திற்கு அரசு அனுமதித்தும் அதிகாரிகள் திறக்கவிடாமல் தடுக்கிறார்கள். இது தொடர்பாக அனைத்து தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்புடன் பேசி, நாளை(இன்று) மாவட்ட கலெக்டர் அலுவலகம் சென்று போராட்டம் நடத்தி கலெக்டரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

Next Story