குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்


குழந்தைகள், குடும்பத்தை மறந்து தியாகம் செய்யும் செவிலியர்கள்
x
தினத்தந்தி 12 May 2020 4:34 AM GMT (Updated: 12 May 2020 4:34 AM GMT)

இன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள், குடும்பத்தை மறந்து நோயாளிகளை தங்கள் பிள்ளைகளாக கருதி செவிலியர்கள் சேவை செய்து வருகிறார்கள்.

சேலம்,

செவிலியர்களின் அன்னையாக திகழும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த ஆண்டையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) சர்வதேச செவிலியர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அத்துடன் செவிலியர் மற்றும் தாதியர் உலக ஆண்டாகவும் இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச செவிலியர் தினத்தையொட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் பணிபுரியும் செவிலியர்கள் அளித்த பேட்டி வருமாறு:-

சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் சுமதி:- நான் செய்யும் தொழிலை கடவுளாக மதிப்பவள். குடும்பத்தில் ஆயிரம் பிரச்சினைகள் இருந்தாலும் சீருடை அணிந்து விட்டால் அனைத்தையும் மறந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதே தலையாய கடமையாக கருதுவேன். விருப்பம், தியாகம், தன்னடக்கம், அரவணைப்பு, துணிவு, தூய்மையான அன்பு, பொறுப்புடன் வழிகாட்டும் தன்மையே செவிலியரின் பண்பாக இருக்க வேண்டும். நான் கடந்த 19 ஆண்டுகளாக செவிலியர் பணியில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால் தற்போது கொரோனா நோய் தொற்றால் பாதித்தவர்களில் சிலர் இறந்து விடுவது மிகவும் வருத்தமாக இருக்கிறது. வாரத்தில் பாதி நாட்கள் வீடுகளிலும், மீதி நாட்கள் மருத்துவமனைகளிலும் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இருந்தபோதிலும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை குணமடைய செய்வது எங்களது லட்சியப்பணியாகும். அவர்களிடம் அன்பாக பேசினாலே பாதி நோய் குணமடைந்து விடும்.

வாழப்பாடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் அம்சவள்ளி:-

தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நாங்கள் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். அதாவது தாய் தனது குழந்தையை எப்படி கவனித்து கொள்வாளோ? அதே போலத்தான் நான் நோயாளிகளை பார்க்கிறேன். சேவை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் இதுவரை நான் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். என்னால் ஒரு உயிர் காப்பாற்றப்படுகிறது என்றால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் கிடையாது. மருத்துவத்துறையில் பணிபுரியும் செவிலியர்கள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

திருப்திகரமாக உள்ளது

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் செவிலியர் சத்யா:-

நான் இங்கு கடந்த 3 ஆண்டுகளாக அறுவை அரங்கம் பிரிவில் வேலை பார்த்து வருகிறேன். எப்போதும் நோயாளிகளை கவனித்து கொள்வதே எங்கள் தலையாய பணி. இப்பணியை நான் மிகவும் விரும்பி செய்து வருகிறேன். சமீபத்தில் எங்களது மருத்துவமனைக்கு கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரே ானா அறிகுறி இருந்ததால் நாங்கள் அனை வரும் மிகவும் எச்சரிக்கையுடன் பிரசவம் பார்த்தோம். அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த மறுநாளே அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாங்கள் சுமார் ஒரு வாரம் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டோம். அப்போது எனது மகனை நான் தூரத்தில் இருந்து பார்க்க மட்டுமே செய்தேன். இது எனக்கு மிகவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. தமிழக அரசு எங்களுக்கு தேவையான அனை த்து பாதுகாப்பு உபகரணங்களையும் கொடுத்து உள்ளது. இப்பணி எனக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் மரணம் ஏற்பட கூடாது என்பதே எங்களின் வேண்டுதலாக இருந்து வருகிறது.

அர்ப்பணிப்பு உணர்வுடன்

பென்னாகரம் அரசு மருத்துவமனை செவிலியர் மஞ்சு:-

செவிலியர் பணி சேவை மனப்பான்மையை அடிப்படையாக கொண்டது. கடந்த 1½ மாதங்களுக்கு மேலாக கொரோ னா வைரஸ் தொற்று தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து வருகிறார்கள். கொரோனா பரிசோதனை மற்றும் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகளில் பணிபுரிவது மிகவும் சவாலானது. கொரோனா தடுப்பு பணி மருத்துவத்துறையில் செவிலியர்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தி உள்ளது. செவிலியர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் எங்கள் கடமைகளையும், பொறுப்புகளையும் மேலும் சிறப்பான முறையில் நிறைவேற்ற முயற்சி செய்வோம்.

தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி செவிலியர் சாந்தி:-

மருத்துவ பணி என்பதே சேவையுடன் பணியாற்றுகிற ஒரு உன்னதமான பணியாகும். அந்த மருத்துவ பணியில் உள்ள செவிலியர் பணியை நாங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் மேற்கொண்டு வருகிறோம். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை மலை கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதியில் விபத்தால் காயம் அடைந்தும், யானைகள் தாக்கியும் பொதுமக்கள் தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் உன்னதமான மருத்துவ சேவையை வழங்கி வருகிறோம். படிப்பறிவு இல்லாத கிராமப்புற மக்களும் உடல் நலம் பாதிப்பு என்றால் எங்களை நம்பி வருகிறார்கள். நாங்கள் அவர்களை நல்ல முறையில் கவனித்து குணப்படுத்தி வருகிறோம். தற்போது கொரோனா வைரஸ் பரவுகிற இக்கட்டான சூழ்நிலையில் செவிலியர்களின் பணி மகத்தானது. கர்ப்பிணி செவிலியர்கள், கைக்குழந்தைகள் வைத்துள்ள செவிலியர்கள் கூட தங்களின் கடமையே முக்கியம் என்று வந்து பணியாற்றி வருகிறார்கள். அத்தகைய செவிலியர்களை மத்திய, மாநில அரசுகள் கவுரவிப்பதும், எங்களின் பணியை பாராட்டுவதும் எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story