ராமநாதபுரத்தில் பலத்த இடியுடன் மழை - வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி
ராமநாதபுரத்தில் நேற்று காலை பலத்த இடியுடன் நல்ல மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் சுட்டெரிக்கும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் கத்திரி வெயில் என்ற அக்னி நட்சத்திர வெயில் தொடங்கியதால் அதைவிட அதிக வெயில் சுட்டெரித்தது. ஊரடங்கு உத்தரவால் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தாலும் மின்விசிறிகள் ஓடினாலும் வீடுகளுக்குள் இருக்க முடியாத அளவிற்கு வெப்பமாக இருந்தது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதி அடைந்து வந்தனர்.
கடும் வெப்பம் காரணமாக மக்கள் வெளியில் தலைகாட்டாமல் ஊரடங்கு உத்தரவை காரணம்காட்டி வீட்டிலேயே இருந்தனர். அத்தியாவசிய வேலைகளுக்கு வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தாலும் 10 மணிக்கு முன்னதாகவே வெயிலுக்கு பயந்து அந்த வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டனர். முன்பு வெயில் காலங்களில் மக்கள் வெப்பத்தின் தாக்கத்தை தணிக்க தர்ப்பூசணி, இளநீர், சர்பத், நுங்கு, பதனீர் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த உணவு பொருட்களை உண்டு தங்களின் வெப்ப தாக்கத்தை தணித்து கொண்டனர். இந்த ஆண்டு கொரோனா தாக்கம் காரணமாக சாலையோர கடைகளுக்கு நேற்று முன் தினம் வரை தடைவிதிக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நீர்ச்சத்து உணவு பொருட்கள் கிடைக்காமல் அவதி அடைந்தனர்.
ஒரு சில இடங்களில் இந்த உணவு பொருட்கள் கிடைத்தாலும் தேவை அதிகம் காரணமாக அதிக விலைக்கு விற்பனையானது. இவ்வாறு கொரோனாவின் தாக்கம் ஒருபுறம், வெப்பத்தின் தாக்கம் ஒரு புறம் என மக்கள் சொல்ல முடியாத அவதி அடைந்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் திடீரென்று பலத்த இடி-மின்னலுடன் சாரல் மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இதன்பின்னர் காலை 9.45 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக நல்ல மழை பெய்தது. சாலைகளில் மழைவெள்ளம் தேங்கி நிற்கும் அளவிற்கு ஓரளவு நல்ல மழை பெய்ததால் கத்தரி வெயிலின் வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Related Tags :
Next Story