சிவகங்கை மாவட்டத்தில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கசாயம் - கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்


சிவகங்கை மாவட்டத்தில், பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கசாயம் - கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்
x
தினத்தந்தி 12 May 2020 4:00 AM IST (Updated: 12 May 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சுவாச பொடி மற்றும் கசாயத்தை கலெக்டர் ஜெயகாந்தன் வழங்கினார்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களாக கொரோனா தொற்று இல்லாமல் உள்ளது. இதேநிலை தொடர பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது. இதில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சுவாச பொடி மற்றும் ஓரா கசாயம் வழங்கப்பட உள்ளது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் பொதுமக்கள், போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு சுவாச பொடி மற்றும் ஓரா கசாயம் ஆகியற்றை வழங்கினார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர், உள்ளாட்சி துறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து எடுத்த முன்எச்சரிக்கை நடவடிக்கைகளால் கடந்த 20 நாட்களாக இந்த மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலை தொடர்ந்து நீடிக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது வெளி மாவட்டங்களில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு வருபவர்கள் 14 நாட்கள் அவர்களே வீடுகளில் தனிமைப்படுத்தி கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய வீடுகளிலேயே சென்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இது தவிர அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கப்பட உள்ளது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் தற்போது சுவாச பொடி மற்றும் ஓரா கசாயம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதல் கட்டமாக சிவகங்கையில் தொங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிவகங்கை இளையமன்னர் மகேஷ்துரை, இயற்கை உணவுகள் பயிற்சி மைய டாக்டர்கள் சரவணன் மற்றும் ராஜரீகா, சிவகங்கை ஆர்.டி.ஓ. சிந்து, தாசில்தார் மைலாவதி, நகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், கூட்டுறவு வங்கி தலைவர் ஆனந்தன், சமூக ஆர்வலர் அயோத்தி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story