4,107 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் - கலெக்டர் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 4 ஆயிரத்து 107 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் 33 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 6 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டனர். இதில் சுமார் 200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை.
வடமாநில தொழிலாளர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் பீகார், ஜார்கண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 8 ஆயிரத்து 700 தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறவர்கள், பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்தனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் 4 ஆயிரத்து 107 பேர் சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக பீகாரை சேர்ந்த 263 தொழிலாளர்கள் நெல்லையில் இருந்து ரெயில் மூலம் அனுப்பப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து ஜார்கண்டை சேர்ந்த 140 பேர் நாளை (அதாவது இன்று) அனுப்பி வைக்கப்பட உள்ளனர். தொடர்ந்து உத்தரபிரதேச தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story