திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 60 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது


திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 60 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது
x
தினத்தந்தி 13 May 2020 4:00 AM IST (Updated: 13 May 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 60 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

சத்தியமங்கலம், 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதை உள்ளது. இது 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இதன் வழியாக தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும் அங்கிருந்து தமிழகத்துக்கும் இருசக்கர வாகனங்கள், கார், பஸ், லாரி, சரக்கு வாகனம், கனரக வாகனங்கள் போன்றவை சென்று வரும்.

ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக திம்பம் மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அத்தியாவசிய தேவைகளுக்கும் மட்டும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

இதனால் திம்பம் மலைப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் திம்பம் மலைப்பாதை வழியாக ஒரு சில வாகனங்கள் சென்று வருகின்றன.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து மாங்காய்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை லாரி ஒன்று கோவைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை டிரைவர் கருப்பசாமி (வயது 40) என்பவர் ஓட்டினார்.

திம்பம் மலைப்பாதை 3-வது கொண்டை ஊசி வளைவில் இந்த லாரி சென்றபோது திடீரென நிலைதடுமாறியது. அப்போது ரோட்டின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 60 அடி பள்ளத்தில் பாய்ந்தது.

உடனே டிரைவர் லாரியில் இருந்து வெளியே குதித்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியின் 4 சக்கரங்கள் கழன்று ஓடின.

விபத்தின்போது லாரியில் இருந்த மாங்காய்கள் சிதறின. கவிழ்ந்து கிடந்த லாரியின் அருகில் மாங்காய்கள் குவியலாக கிடந்தன.

இந்த விபத்தில் லாரி நொறுங்கி சேதம் அடைந்தது. இதுபற்றி அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சிலர் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசாரும், வனத்துறையினரும் அங்கு சென்று பள்ளத்தில் கிடக்கும் லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story