நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு: ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்


நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு: ரேஷன் கடையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 13 May 2020 3:45 AM IST (Updated: 13 May 2020 2:07 AM IST)
t-max-icont-min-icon

நிவாரண பொருட்கள் வழங்குவதில் முறைகேடு நடப்பதாக கூறி ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வீரபாண்டி, 

திருப்பூர் இடுவாய், பாரதிபுரம் திருவள்ளுவர் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ரேஷன் கடையில், மே மாதத்திற்கான நிவாரண பொருட்களான அரிசி, பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்பட்டு வந்தது. அப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அவர்களில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டுமே நிவாரணப்பொருட்கள் வழங்கப்படுவதாகவும் மற்றவர்களுக்கு பாதி அளவு கொடுத்து அனுப்பி விடுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திடீரென்று ரேஷன் கடையை முற்றுகையிட்டு ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஒரு மாத காலமாக வீட்டில் அடைபட்டு கிடக்கிறோம். போதிய உணவின்றியும் வேலையில்லாமலும் நாங்கள் தவித்து வரும் நிலையில் மாநில அரசு தங்களுக்கு வழங்கும் நிவாரண பொருட்களை சரிவர ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவதில்லை. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அதிக அளவில் பொருட்களை வழங்கி வருகின்றனர். இது குறித்து ஊழியரிடம் கேட்டால் எந்த பதிலும் தெரிவிப்பதில்லை.

தற்போது ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில் நிவாரணப்பொருட்களை நம்பி நாங்கள் வாழ்க்கை நடத்தி வருகிறோம். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதுபோன்ற கடைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களை சமாதானம் செய்தனர். பின்பு நிவாரண பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story