தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் தினக்கூலி ரூ.600 வழங்க வலியுறுத்தல்
நெல்லையில் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
தமிழகத்தில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கு தினசரி கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு அறிவித்தபடி இரட்டிப்பு சம்பளத்துக்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும். அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் போதுமான அளவுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை மாநகரில் மகாராஜ நகர், சாந்திநகர், பெருமாள்புரம், வண்ணார்பேட்டை, மேலப்பாளையம், சிந்துபூந்துறை, மீனாட்சிபுரம், தச்சநல்லூர், பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள வார்டு அலுவலகங்கள் முன்பு நேற்று காலை தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊரக உள்ளாட்சி துறை ஊழியர் சங்க சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் மோகன், செயலாளர் சின்னசாமி, சி.ஐ.டி.யு. அகில இந்திய செயலாளர் கருமலையான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இதேபோல் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, விக்கிரமசிங்கபுரம், அம்பை, சேரன்மாதேவி உள்பட பல்வேறு இடங்களில் தூய்மை பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மேலப்பாளையம் மண்டலம் 14-வது வார்டில் மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், தூய்மை பணியாளர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
Related Tags :
Next Story