கொரோனா ஊரடங்கால் மங்கள இசை வாசிக்கும் எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை - தவில், நாதஸ்வர கலைஞர்கள் வேதனை


கொரோனா ஊரடங்கால் மங்கள இசை வாசிக்கும் எங்கள் வாழ்வில் மகிழ்ச்சி இல்லை - தவில், நாதஸ்வர கலைஞர்கள் வேதனை
x
தினத்தந்தி 13 May 2020 4:36 AM IST (Updated: 13 May 2020 4:36 AM IST)
t-max-icont-min-icon

மங்கள் இசைவாசிக்கும் எங்கள் வாழ்வில், ஊரடங்கு காரணமாக மகிழ்ச்சில்லை என்றும், தங்களுக்கு அரசு நிவாரணத்தொகை வழங்கவேண்டும் என்றும் நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாதஸ்வரம், தவில் கலைஞர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிலை மட்டுமே நம்பி குடும்பம் நடத்தி வருகிறார்கள். தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் கோவில் நிகழ்ச்சிகள், ,திருமணங்கள், அரசு விழாக்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் நாதஸ்வர கலைஞர்கள், தவில் வித்வான்கள் யாருக்கும் எந்த வேலையும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றார்கள். நிகழ்ச்சிகளுக்கு செல்லாததால் வருமானமின்றி குடும்பம் நடத்த முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ஆனந்தன், செயலாளர் சுதாகர் ஆகியோர் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவில் கலைஞர்கள் உள்ளார்கள். கடந்த மூன்று மாதங்களாக கோவில்களில் விசேஷங்கள் நடைபெறும் மாதம். அதேபோன்று சுபமுகூர்த்தம், திருமணங்கள் நடைபெறும் இந்த மாதத்தில் ஒரு திருமணத்தில் வாசித்தால் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை எங்களுக்கு வருமானம் கிடைக்கும். நாங்கள் ஐந்துபேர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டால் ஒரு நபருக்கு ரூ.2 ஆயிரம் வரை கிடைக்கும்.

அதே போன்று கோவில் நிகழ்ச்சிகள் மூலம் எங்களுக்கு நல்ல வருமானம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் கடந்த 3 மாதங்களாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் செல்லமுடியாமல் வீட்டில் முடங்கி கிடக்கிறோம். இதனால் எங்கள் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. வரும் மாதங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் எங்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவு உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது.

கொரோனா தடுப்பு ஊரடங்கால் எங்களது நாதஸ்வர தவில் இசை துறை முடங்கி கிடக்கிறது. எங்களுக்கு வாழ்வாதாரம் இல்லாமல் வறுமையில் வாடுகிறோம். தமிழக அரசு சார்பாக எங்களுக்கு எந்த ஒரு உதவித்தொகையும் கிடைக்கவில்லை. நாதஸ்வர தவில் கலைஞர்களுக்கு தனியாக வாரியம் எதுவும் இல்லை. 

எங்களது நாதஸ்வர தவில் கலைஞர்கள் கட்டுமானத் தொழில் வாரியத்தில் தற்போது சேர்க்கப்பட்டு உள்ளார்கள். ஆனால் நாங்கள் யாரும் பதிவு செய்யாததால் எங்களுக்கு எந்த நிவாரணத்தொகையும் வரவில்லை. அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் முன்னின்று மங்கள இசை வாசிக்கும் எங்களது வாழ்வில் மகிழ்ச்சி இல்லாமல் உள்ளோம். எங்களது வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட அரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story